என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள்  நியமனத்தில் விதிமுறை மீறல் 

தினமலர்  தினமலர்
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள்  நியமனத்தில் விதிமுறை மீறல் 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


கோவை : என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்தில் விதிமுறை மீறல்கள் தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, தகுதியற்ற முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை, பொறுப்பில் இருந்து விடுவிக்க, மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016 - 17ம் ஆண்டு முதல், மத்திய அரசின் 100 சதவீதம் மானியத்தில், அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் என்.எஸ்.எஸ்., செயல்படுகிறது.

இச்செயல்பாடுகளை மேற்கொள்ள, தகுதியான ஆசிரியருக்கு மட்டுமே, 'மெரிட்' அடிப்படையில் பொறுப்புகளை வழங்க வேண்டும். ஒரு நபர் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே இப்பொறுப்பில் செயல்பட இயலும்.

மகளிர் கல்வி நிறுவனங்களுக்கு, மகளிர் ஆசிரியரே திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படலாம்.

உடற்கல்வி இயக்குனர்கள், என்.சி.சி., அலுவலர்கள், நுாலகர் போன்றோர் நியமிக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது.

மேலும், திட்ட ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படும் நபர், தேர்வு பெற்ற மூன்று மாதங்களுக்குள், அரசு தரப்பில் அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

மூன்று மாதங்களில் பயிற்சி நடைபெறாத பட்சத்தில், ஓராண்டிற்குள் இப்பயிற்சியை பெற வேண்டும். ஓராண்டிற்குள் பயிற்சி பெறாத பட்சத்தில், அந்த நபர் விடுவிக்கப்பட்டு, வேறு நபர் தேர்வு செய்யப்படவேண்டும். திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பல்வேறு பொறுப்புகளுக்கும், பணியும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், பெரும்பாலான கல்லுாரிகளில், விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. உடற்கல்வி இயக்குனர்கள், நுாலகர், அனுபவமில்லாத ஆசிரியர்கள், என்.சி.சி., அலுவலர்களே கூடுதல் பொறுப்பாக இதற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், என்.எஸ்.எஸ்., சார்ந்த விருதுகள் வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தொடர்ந்து, என்.எஸ்.எஸ்., மண்டல இயக்குனரகத்தில் இருந்து, அனைத்து பல்கலைகளுக்கும், விதிமுறைகளை பின்பற்றவும், கல்லுாரிகளுக்கு உத்தரவிடவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கோவை பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லுாரிகளிலும், என்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்களாக செயல்படும் என்.சி.சி., அலுவலர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், நுாலகர்களை விடுவிக்கவும், நான்கு ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகிப்பவர்களை விடுவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பாரதியார் பல்கலையின் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாதுரை, உடற்கல்வித்துறை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பதிவாளர் முருகவேலிடம் கேட்டபோது, ''பாரதியார் பல்கலை உட்பட அனைத்து கல்லுாரிகளிலும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன. உரிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு, சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட்டு முடிவு மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

கோவை : என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமனத்தில் விதிமுறை மீறல்கள் தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, தகுதியற்ற முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை, பொறுப்பில் இருந்து

மூலக்கதை