ஒப்பந்தப்படி பணத்தைத் திருப்பித் தர வேண்டாம் - சிம்பு

தினமலர்  தினமலர்
ஒப்பந்தப்படி பணத்தைத் திருப்பித் தர வேண்டாம்  சிம்பு

ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்து வெளிவந்த படம் 'வெந்து தணிந்தது காடு'. அப்படம் வெளியாவதற்கு முன்பாக சிம்பு படங்கள் வெளியாக சில முட்டுக்கட்டை இருந்தது. அவருக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட விவகாரத்தில் அதன் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் சிக்கல் நீடித்ததே அதற்குக் காரணம்.

சிம்பு தரப்பிலான சிக்கல்களை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அப்போது தீர்த்து வைத்ததாகச் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது தயாரிப்பில் மீண்டும் சிம்பு நடிக்க 'கொரோனா குமார்' என்ற படத்தைத் தயாரிக்க அறிவிப்பையும் வெளியிட்டார்கள். ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதைத் தொடர்ந்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

அதைத் தொடர்ந்து ஒரு கோடிக்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிம்பு தரப்பிலிருந்து, “ஒரு ஆண்டுக்குள் படத்தை ஆரம்பிக்கவில்லை என்றால் ஒப்பந்தப்படி ஒரு கோடி ரூபாய் முன்பணத்தைத் திரும்பத் தர வேண்டியதில்லை,” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பஞ்சாயத்து, வழக்கு என சிம்பு சிக்கலில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள பிரம்மாண்டமான படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை.

மூலக்கதை