நடிகர் 'என் உயிர் தோழன்' பாபு காலமானார்…

தினமலர்  தினமலர்
நடிகர் என் உயிர் தோழன் பாபு காலமானார்…

படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்திற்கு பின் 30 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்து வந்த நடிகர் 'என் உயிர் தோழன்' பாபு(58) காலமானார்.

1990ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் 'என் உயிர் தோழன்'. அப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாபு. அப்படத்திற்கு பாரதிராஜாவுடன் இணைந்து கதையும், தனியாக வசனத்தையும் எழுதியவர். ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டத் தொண்டனது வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று சொன்ன படம். சரியாக கவனிக்கப்படாமல் போன படங்களில் ஒன்று. அறிமுக நடிகரான பாபுவின் நடிப்பு அப்போது பலராலும் பாராட்டப்பட்டது.

அப்படத்திற்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரமன் இயக்கிய 'பெரும்புள்ளி' படத்திலும், அந்தக் கால இயக்குனர் பீம்சிங் மகன் கோபி பீம்சிங் இயக்கிய 'தாயம்மா' படத்திலும் கதாநாயகனாக நடித்தார். அடுத்து 'பொண்ணுக்கு சேதி வந்தாச்சு' என்ற படத்திலும் நடித்தார்.

'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் நடித்த போது ஒரு உயரத்திலிருந்து கீழே குதிக்க வேண்டிய காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. படக்குழுவினர் டூப் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ சொல்லியும் ஆர்வத்தில் அவரே மேலிருந்து குதித்தார். ஆனால், தவறுதலாக தள்ளி விழுந்து முதுகெலும்பில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அது அவருக்கு நிரந்தரப் படுக்கையானது. சிறிது காலம் நடந்தாலும் மீண்டும் படுத்த படுக்கையானார். அதன் பின்பு ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து வெளிவராமல் போன 'அனந்த கிருஷ்ணா' என்ற படத்திற்கு வசனம் எழுதினார்.

கடந்த 30 ஆண்டு காலமாக படுத்த படுக்கையாகவே இருந்தவர், நேற்று இரவு மரணமடைந்துவிட்டார். மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் க.இராஜாராம் சகோதரியின் மகன் பாபு.

மூலக்கதை