‛ எவ்வளவு காலத்துக்கு முடக்குவீர்கள் ': ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் கேள்வி

தினமலர்  தினமலர்
‛ எவ்வளவு காலத்துக்கு முடக்குவீர்கள் : ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் கேள்வி

புதுடில்லி: ''இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, முடக்குவீர்கள்,'' என, எதிர்க்கட்சியினருக்கு ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பினார்.

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று கூடியது. அப்போது, 75 ஆண்டுகள் பார்லிமென்ட் பயணம் குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபாவில் பேசியதாவது:
சபையில் எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ராஜ்யசபா நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் கேமராக்கள், எதிர்க்கட்சியினர் பேசும்போது சிறிது அவர்கள் பக்கமும் திரும்ப வேண்டும்.

பேச வாய்ப்பு


நாங்கள் எங்கள் கருத்துக்களை சொல்ல வெளியில் வாய்ப்பு இல்லை. எனவே தான் இங்கு வெளிப்படுத்த விரும்புகிறோம். சில சந்தர்ப்பங்களில் பேசும் விஷயங்களில் தவறு இருந்தாலும், எம்.பி.,க்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

நாங்கள் சிறிய தவறு செய்தாலே எங்களை கடுமையாக தண்டிக்கிறீர்கள். ஆனால், பா.ஜ., - எம்.பி.,க்கள் பெரிய தவறு செய்கின்றனர். அதை இந்த நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களை நீங்கள் மன்னித்து விடுகிறீர்கள். இருதரப்பும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.

சபையில் நாங்கள் குறுக்கீடு செய்யும் போது, மறைந்த பா.ஜ., - எம்.பி.,க்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் கூறியதை தான் பின்பற்றுகிறோம். இதை பின்பற்றினால் நாங்கள் சபையை முடக்குவதாக குற்றம் சாட்டுகிறீர்கள்.

இந்த சபையில் நீங்கள் தான் எங்கள் பாதுகாவலர். எங்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் நீங்கள் தான் எங்களை பாதுகாக்க வேண்டும். நாங்கள் எண்ணிக்கையில் சொற்பமாக உள்ளோம். ஆளும் கூட்டணி கட்சியினர் எங்களுக்கு எதிராக திரும்பும் போது, நாங்கள் உங்களிடம் முறையிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:

நன்றாக யோசித்துவிட்டு சொல்லுங்கள். கடந்த கால முன்னுதாரணங்களின் அடிப்படையில் எவ்வளவு காலத்துக்கு சபையை செயல்படவிடாமல் முடக்குவது? இதை எத்தனை காலத்துக்கு தான் நியாயப்படுத்துவீர்கள்?

இடையூறு


சபையில் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு அளிக்கப்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் உறுப்பினர் யாரும் சபையில் இருப்பது இல்லை. அதற்கு முன்பாகவே அமளியில் ஈடுபட்டு சபையைவிட்டு வெளியேறி விடுகிறீர்கள்.

சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை, அரசை எதிர்ப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள். அதை ஒரு வியூகமாக பயன்படுத்துகிறீர்கள். இதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கும் போது, ஜெய்ராம் ரமேஷ் அடிக்கடி குறுக்கிட்டு, 'சூப்பர் எதிர்க்கட்சிதலைவர்' போல் செயல்படுகிறார்.விவாதங்களில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஜெய்ராம் ரமேஷின் உதவி தேவையில்லை என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

 ராஜ்யசபா நேற்று கூடியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 90, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சபைக்கு வருகை தந்தார். மிகவும் பலவீனமாக காணப்பட்டார். ராஜ்யசபா தலைவரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் மற்றும் ராஜ்யசபா காங்., எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பேசியதை ஒரு மணி நேரம் அமர்ந்து அமைதியாக கேட்டார். ராஜ்யசபா கூடியதும், தெலுங்கானாவை சேர்ந்த பாரத் ராஷ்ட்ர சமிதி உறுப்பினர்கள், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி, 'பிங்க்' நிற பதாகைகளை சுமந்தபடி சபையில் எழுந்து நின்றனர். அக்கட்சியின் எம்.பி., கேசவ ராவ் பேச முற்பட்டார். ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் எச்சரிக்கை விடுத்ததும் அவர்கள் பதாகைகளை மடித்து வைத்து அமர்ந்தனர்.



புதுடில்லி: ''இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, முடக்குவீர்கள்,'' என, எதிர்க்கட்சியினருக்கு ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி

மூலக்கதை