நிஜமான சனாதனவாதிகள் தி.மு.க.,வினர் தான்!

தினமலர்  தினமலர்
நிஜமான சனாதனவாதிகள் தி.மு.க.,வினர் தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


என். கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அப்பா செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்பதால், திராவிடம் அதை எதிர்க்கிறது' என, சனாதனத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

ஆனால், தி.மு.க.,வில் காலங்காலமாக என்ன நடக்கிறது? கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என அனைவரும், குடும்ப தொழிலாக அரசியலை தானே, சுவீகாரம் எடுத்துள்ளனர். கருணாநிதி மகள் கனிமொழியும், தந்தையை பின்பற்றி அரசியலுக்கு தானே வந்துள்ளார்.

அவ்வளவு ஏன்... இவ்வளவு பேசும் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, தற்போது எம்.பி.,யாக அப்பாவின் அரசியல் தொழிலில் தானே உள்ளார். இதன் வாயிலாக ஸ்டாலின், உதயநிதி, பொன்முடி போன்றோரே தங்களை உண்மையான சனாதனவாதிகளாக வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

நேரு பரம்பரையில் இந்திரா, ராஜிவ், சஞ்சய், சோனியா, ராகுல், பிரியங்கா, வருண், மேனகா என பலரும் அரசியல்வாதிகளாகவே இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்.

சிவாஜி கணேசன் சினிமா நடிகர். அவரது மகன், பேரன் ஆகியோரும் தற்போதும் அதே தொழிலை செய்கின்றனர். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் குடும்பமே, இன்னும் சினிமா தயாரிக்கும் தொழில் தானே செய்கின்றனர்.

தந்தை செய்யும் தொழிலை தனயன் செய்வது அவ்வளவு குற்றமா... மன்னராட்சியில் மன்னர் இறந்த பின், அவரது மகன் தானே ஆட்சிக்கு வந்தார். அப்படி என்றால், மன்னர்கள் சனாதனத்தைத் தானே போற்றி வளர்த்தனர். அந்த மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு இவர்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றனரே!

அரசியல், விவசாயம், சினிமா என்று எந்தத் துறையை எடுத்தாலும், தந்தையின் தொழிலை அவரது வாரிசுகள் செய்வது பாரம்பரிய வழக்கமாகவே போற்றப்பட்டது. 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதைத் தான் சனாதனம் நமக்கு சொல்கிறது.

தொழிலில் ஏற்றத்தாழ்வுகளை சனாதனம் கற்பிப்பதில்லை; எல்லாரையும் அன்புடன் நடத்த வேண்டும் என்கிறது. ஆனால், மக்களிடம் வெறுப்பு அரசியலை வளர்க்கிறது திராவிடம்.

கால் ஒடிந்து போன ஆட்டுக்குட்டிக்காக கண்ணீர் சிந்திய புத்தரும், வாடிய பயிரைப் பார்த்து மனம் வாடிய வள்ளலாரும் சனாதனத்தின் எதிரிகளாக எப்படி இருக்க முடியும்?

எனவே, வாரிசு அரசியல் நடத்தும் பொன்முடி போன்றோர், சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில் அர்த்தமில்லை.

என். கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அப்பா செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்பதால், திராவிடம் அதை எதிர்க்கிறது' என, சனாதனத்திற்கு புதிய விளக்கம்

மூலக்கதை