பார்லி., திறப்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தினமலர்  தினமலர்
பார்லி., திறப்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி,-புதிய பார்லிமென்டை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி திறப்பு விழாவை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதிய பார்லிமென்டை, நாளை மறுதினம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

'நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் இந்த திறப்பு விழா நடத்தப்பட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.

இதற்கிடையே, இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், தி.மு.க., உட்பட, 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதற்கு, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து, முந்தைய உதாரணங்களை சுட்டிக் காட்டியுள்ளது.

பார்லி., திறப்பு விழா தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், ஜெயா சுகின் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

பார்லிமென்ட் என்பது நம் நாட்டின் சட்டம் இயற்றும் உயரிய அமைப்பாகும். இது, ஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா என்ற இரண்டு சபைகள் அடங்கியதாகும்.

பார்லிமென்ட் கூடுவது, ஒத்தி வைப்பது, அதை கலைக்க உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. பார்லிமென்டின் ஒரு அங்கமாக ஜனாதிபதி உள்ளார்.

ஆனால், புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கும் ஜனாதிபதியை அழைக்கவில்லை. தற்போது புதிய பார்லி., திறப்பு விழாவுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

ஜனாதிபதி இல்லாமல் பார்லிமென்ட் திறப்பது, அரசியல் சாசனத்தையும் இந்த நாட்டு மக்களையும் அவமதிப்பதாகும்.

எனவே, ஜனாதிபதி தலைமையில் பார்லிமென்ட் திறப்பு விழாவை நடத்த, லோக்சபா செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

புதுடில்லி,-புதிய பார்லிமென்டை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி திறப்பு விழாவை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மூலக்கதை