ஹிந்து கோவில்கள் தாக்குதல் விவகாரம் ஆஸி., பிரதமருடன் மோடி ஆலோசனை

தினமலர்  தினமலர்
ஹிந்து கோவில்கள் தாக்குதல் விவகாரம் ஆஸி., பிரதமருடன் மோடி ஆலோசனைசிட்னி, ஹிந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செயல்பாடுகள் குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மூன்று நாள் பயணத்தின் கடைசி நாளான நேற்று, இரு நாட்டு பிரதமர்களும், இரு தரப்பு உறவு கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மாணவர்கள், கல்வி ஆராய்ச்சியாளர்கள், தொழில் துறையினர் இரு நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் நடைமுறையை மேலும் சுலபமாக்குவது உள்ளிட்ட சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பசுமை ஹைட்ரஜன் எரிவாயு தொடர்பாக இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

கூட்டத்துக்குப் பின், பிரதமர் மோடி கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செயல்பாடுகள் தொடர்பாகவும், அல்பனீஸ் உடன் ஏற்கனவே பேசியுள்ளேன். தற்போதும் அது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம்.

இந்தப் பிரச்னைகளில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இரு நாட்டுக்கும் இடையே உள்ள சிறப்பான நட்புறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, வன்முறை, பிரிவினையை எந்த வடிவிலும் ஏற்க முடியாது. பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதையே இரு நாட்டு உறவுக்கு அடிநாதமாகும்.

இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும்படி, பிரதமர் அல்பனீஸ் மற்றும் ஆஸ்திரேலிய மக்களை வரவேற்கிறேன்.

கிரிக்கெட்டில், டி - 20 எனப்படும் மிக வேகமான போட்டிகள் நடக்கின்றன.

அதுபோலவே, இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவும் மிகவும் வேகமாக உள்ளது. இந்தியாவுக்கு அல்பனீஸ் வந்த இரண்டு மாதங்களுக்குள் நான் இங்கு வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறியதாவது:

இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்தாண்டு கையெழுத்தானது.

தற்போது, விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் தயாராகி வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இது கையெழுத்தாகும்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துாதரகம் அமைக்கப்படும்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் வாயிலாக ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், இந்த துாதரகம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிட்னி, ஹிந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செயல்பாடுகள் குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக ஆலோசனை

மூலக்கதை