சாம்பாரில் விஷம் வைத்து மாமியார் மாமனார் கொலை; மாஜி எஸ்.ஐ., மகள் கைது

தினமலர்  தினமலர்
சாம்பாரில் விஷம் வைத்து மாமியார் மாமனார் கொலை; மாஜி எஸ்.ஐ., மகள் கைது

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் 60. இவரது மனைவி கொளஞ்சியம்மாள் 55. இவர்களது மகன் வேல்முருகனுக்கும் விருத்தாசலம் தங்கமணி கார்டன் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. பூமாலை மகள் கீதா 33 என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் மகன்கள் உள்ளனர். வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்தார்.

கொளஞ்சியம்மாள் தன் வீட்டில் 2021ம் ஆண்டு டிச. 29ல் முள்ளங்கி சாம்பார் வைத்தார். அதை சுப்ரமணியன் கொளஞ்சியம்மாள் பேரன் சரவணகிருஷ்ணன் ஆகியோர் சாப்பிட்டனர். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு மகன் நித்தீஷ்வரன் 8 மகள் பிரியதர்ஷினி 4 ஆகியோரும் முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்டனர். கொளஞ்சியம்மாள் சுப்ரமணியன் சிறுவர்கள் சரவணகிருஷ்ணன் நித்தீஷ்வரன் பிரியதர்ஷனி ஆகியோருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு அனைவருக்கும் அருகில் உள்ள கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சியம்மாள் 2022ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுச்சேரி 'ஜிப்மரில்' சிகிச்சை பெற்ற சுப்ரமணியன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நித்தீஷ்வரன் இறந்தனர். இரண்டு மாதங்களுக்கு பின் பிரேத பரிசோதனை முடிவில் எலி பேஸ்ட் கலந்த முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்டதில் மூவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில் வேல்முருகனின் மனைவி கீதாவுக்கும் விருத்தாசலம் புதுக்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ஹரிஹரன் 43 என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையறிந்த கீதாவின் மாமியார் கொளஞ்சியம்மாள் அப்போது வெளிநாட்டில் இருந்த மகன் வேல்முருகனிடம் தெரிவித்தார். ஆத்திரமடைந்த கீதா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தீர்த்துகட்ட முடிவு செய்து முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் கலந்துள்ளார். இதை சாப்பிட்டு கொளஞ்சியம்மாள் சுப்ரமணியன் நித்தீஸ்வரன் மூவரும் இறந்து உறுதி செய்யப்பட்டது.

விருத்தாசலம் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் உத்தரவின்படி மூவரின் இறப்பை கொலை வழக்காக இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் பதிவுசெய்தனர். இதையடுத்து கீதா, கள்ளக்காதலன் ஹரிஹரன் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகன் அரிவாளால் வெட்டியதில் தாய் கொலை; தந்தை படுகாயம்


கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பெருங்கடை தெருவைச் சேர்ந்தவர் பவுல், 72. மனைவி அமலோற்பவம், 68. இவர்களுக்கு மோகன்தாஸ், 50, உட்பட இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். மோகன்தாசுக்கும், பெற்றோருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது. பெற்றோரை மோகன்தாஸ் அடிக்கடி தாக்கி கொடுமைப்படுத்தினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு மோகன்தாஸ், தாய், தந்தையை சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே தாய் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் தந்தை அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பத்து இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மோகன்தாஸ் பூதப்பாண்டி போலீசில் சரணடைந்தார்.

மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால், தனக்கு சேர வேண்டிய சொத்தை தராமல் சகோதரிக்கு எழுதி கொடுத்ததால், இருவரையும் வெட்டியதாக, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனியார் ஊழியரை கடத்தி ரூ.23 லட்சம் கொள்ளை


ஈரோடு மாவட்டம், பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 47; தனியார் இரும்பு உருக்காலை பணியாளர். இவர், ஓலப்பாளையத்தில் உள்ள கம்பெனி கிளை அலுவலகத்தில் இருந்து, 23 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு, காரில் ஈங்கூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது மூன்று பேர் வழிமறித்து நிறுத்தி, மிரட்டி காருக்குள் ஏறியுள்ளனர். ஈரோடு, குறிஞ்சி நகருக்கு காரை ஓட்டி சென்றுள்ளனர். அங்கு சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டிப்போட்டு, 23 லட்சம் ரூபாயை பறித்து, வேறு வாகனத்தில் தப்பினர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின், கை, கால்களை அவிழ்த்துக் கொண்டு, கம்பெனிக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது குறித்து நிறுவனம் சார்பில், சென்னிமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சத்தியமூர்த்தியை காருடன் கடத்திய இடத்தில் இருந்து, கார் நிறுத்தப்பட்ட இடம் வரை, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மூன்று பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கூலி தொழிலாளி கொடூரமாக எரித்து கொலை; காதலனுடன் கள்ளக்காதலி கைது


கடலுார் மாவட்டம், பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 50; கூலித் தொழிலாளி. இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இந்நிலையில், கடலுார் மாவட்டம், முருகன்குடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மனைவி கவிதா, 28, என்பவருடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகத்திற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஆறுமுகத்தின் நண்பரான உளுந்துார்பேட்டை தாலுகா பு.கிள்ளனுார் பகுதியைச் சேர்ந்த வைத்தி, 55, என்பவர் ஆறுமுகத்தை பார்க்க வரும்போது கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதை அறிந்த ஆறுமுகம், கவிதாவை பலமுறை கண்டித்தார். அதை ஏற்காத அந்த பெண், பு.கிள்ளனுார் பகுதிக்கு சென்று வைத்தியுடன் சேர்ந்து வாழ்ந்தார். இதை அறிந்த ஆறுமுகம், நேற்று முன்தினம் அங்கு சென்று கவிதாவை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆறுமுகம், கவிதா, வைத்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆறுமுகம், கவிதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றார். உடன் கவிதா, வைத்தி இருவரும் அந்த பெட்ரோலை பறித்து, ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து உயிருக்கு போராடிய ஆறுமுகத்தை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இரவில் இறந்தார். இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கவிதா, வைத்தி ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல்; இந்திய வம்சாவளி இளைஞர் கைது


அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான, வெள்ளை மாளிகை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மிசோரியில் உள்ள செஸ்டர்பீல்டில் வசித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா, 19, என்ற இளைஞர், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடுப்புகள் மீது லாரியை ஓட்டி மோதினார். இதை பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், கந்துலாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து, போலீசார் கூறியதாவது: மிசோரியில் இருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் வந்த சாய் வர்ஷித் கந்துலா, லாரியை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கிருந்து நேரடியாக வெள்ளை மாளிகைக்கு வந்த அவர், பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதினார். அவரை கைது செய்த போது, லாரியில் நாஜி கொடி இருந்தது. சாய் வர்ஷித் கந்துலாவிடம் விசாரித்ததில், அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய வந்ததாகவும், அதிகாரத்தை கைப்பற்ற வந்ததாகவும் தெரிவித்தார். இவர் மீது, கொலை வழக்கு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூலிப்படை வைத்து தந்தையை கொன்ற மகள் அதிரடி கைது


மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூரைச் சேர்ந்த 60 வயது நபருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ள நிலையில், அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். மனைவியின் பெயரில் உள்ள பண்ணை வீடு, பெட்ரோல் பங்க் உள்ளிட்டவற்றை தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என மனைவி, மகளை அவர் மிரட்டி வந்துள்ளார். சமீபத்தில், இது குறித்து தன் மனைவி மற்றும் மகளுடன் அந்த நபர் தகராறில் ஈடுபட்டு, கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த 35 வயது மகள், தன் தந்தையைக் கொல்ல அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை 5 லட்சம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்தார். இதையடுத்து, பிவாபூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில், கடந்த 17ம் தேதி அந்த நபரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர். கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கூலிப்படையினரை கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இறந்தவரின் மகளை நேற்று கைது செய்தனர்.

3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை


கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்தவர் ஸ்ரீஜா 35. இவருக்கு திருமணமாகி சுஜித், 12, சூரஜ், 10, சுரபி, 8, என மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவரை விவாகரத்து செய்து குழந்தைகளுடன் தனியாக வசித்த இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ஷாஜிக்கும், 37, பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து, தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை இவர்கள் இருவரும் வீட்டில் துாக்கிட்டபடி இறந்து கிடந்தனர். ஸ்ரீஜாவின் மூன்று குழந்தைகளும் மற்றொரு அறையில் இறந்து கிடந்தனர். குடும்ப பிரச்னையால் இவர்கள் இருவரும் குழந்தைகளை கொன்று, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'38'க்கு திருமணம் செய்ய 7 வயது சிறுமி விற்பனை


ராஜஸ்தானில், தோல்பூர் மாவட்டத்தில் உள்ள மனியா என்ற பகுதியைச் சேர்ந்தவர், பூபால் சிங், 38. இவர், தன் திருமணத்திற்காக, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம், அவரது 7 வயது மகளை, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். இதை அடுத்து, சிறுமியின் பெற்றோர் சம்மதத்துடன், அவரை, கடந்த 21ம் தேதி, பூபால் சிங் திருமணம் செய்தார். இது குறித்த தகவல், தோல்பூர் மாவட்ட போலீசாருக்கு தெரிய வந்தது. இதை அடுத்து, பூபால் சிங்கின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த சிறுமியை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது: தந்தையிடம், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவரது மகளை வாங்கியதை பூபால் சிங் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் 60. இவரது மனைவி கொளஞ்சியம்மாள் 55. இவர்களது மகன் வேல்முருகனுக்கும் விருத்தாசலம் தங்கமணி கார்டன்

மூலக்கதை