ஆளாளுக்கு தி.மு.க., அரசை எதிர்க்க ஆரம்பிச்சிட்டீங்களே...

தினமலர்  தினமலர்
ஆளாளுக்கு தி.மு.க., அரசை எதிர்க்க ஆரம்பிச்சிட்டீங்களே...

ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ பேட்டி:


கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சம்பவங்கள், தமிழக அரசுக்கு ஒரு படிப்பினை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. கூட்டணியில் இருந்தாலும், ம.தி.மு.க., இதை கடுமையாக எதிர்க்கிறது. கள்ளச்சாராயத்தால் மரணங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினாலும் தப்பில்லை. தமிழக அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவில் துவங்கி, ஆளாளுக்கு தி.மு.க., அரசை எதிர்க்க ஆரம்பிச்சிட்டீங்களே... இது, எல்லாம் லோக்சபா தேர்தலுக்கு, ‛சீட்' எண்ணிக்கையை அதிகரிக்குமா அல்லது குறைக்குமான்னு தெரியலையே!

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:


தமிழகத்தில் செயல்பட்டு வரும், 14 ஆயிரம் தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் முடிவுக்கு வருவதை ஒட்டி, புதிய கட்டண நிர்ணய அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும். அதிக கல்வி கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிப்பதை தடுக்க வேண்டும். அரசின் கட்டண விகிதங்களை வெளியிட வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு, உரிமையை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

கட்டண நிர்ணயம் எல்லாம் கண்துடைப்புக்கு தான்... பெற்றோரிடம் கறப்பதை தனியார் பள்ளிகள் செய்துட்டு தான் இருப்பாங்க!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை:

மரக்காணம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில், விஷச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த நிலையில், ஒரே வாரத்தில் இப்போது, தஞ்சை புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள பாரில் மது அருந்திய, 65, 25 வயது நபர்கள் மரணமடைந்துள்ளனர். மரக்காணத்தில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு, 10 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் வழங்கினார். தஞ்சையில், 20 லட்சம் ரூபாய் கேட்கின்றனர்.

கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கே, 10 லட்சம் தர்றப்ப, அரசே விற்ற மதுவை குடிச்சவங்களுக்கு, 20 லட்சம் ரூபாய் கேட்பதில் தப்பே இல்லையே!

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு மின்மிகை மாநிலமாக, தமிழகம் மாறியிருப்பதாகவும், இம்மாதம், 19-ம் தேதி ஒரு நாளில் மட்டும், 26 லட்சம் யூனிட் மின்சாரம், யூனிட், 9.76 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். உண்மை நிலை இப்படி இருக்கும் போது, குறைந்த அளவு மின்சாரம் வழங்கும், என்.எல்.சி.,க்கு மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தி.மு.க., ஆட்சிக்கு எப்பவுமே வில்லனா இருக்கிற மின் துறையில, ஏதோ சாதனை படைச்சிட்டதா அவர் பெருமை பேசியிருக்கார்... அது, பொறுக்கலையா இவருக்கு?

ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ பேட்டி:கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சம்பவங்கள், தமிழக அரசுக்கு ஒரு படிப்பினை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. கூட்டணியில்

மூலக்கதை