ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத அளவிற்கு வந்தனர்; ரசிகர்களுக்காக சிறப்பாக ஆட நினைத்தேன்: 82 ரன் விளாசிய விராட் கோஹ்லி பேட்டி
பெங்களூரு: 16வது ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 5வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா நாட் அவுட்டாக 84 (46 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார். கேப்டன் ரோகித்சர்மா 1, இஷான் கிஷன் 10, சூர்யகுமார் 15, கேமரூன் கிரீன் 5, டிம் டேவிட் 4, நேஹால் வதேரா 21, அர்ஷத் கான் நாட் அவுட்டாக 15 ரன் எடுத்தனர். பெங்களூரு பவுலிங்கில், கரண்சர்மா 2, சிராஜ், ஹர்சல் பட்டேல், மைக்கேல் பிரேஸ்வெல், ஆகாஷ் தீப், ரீஸ் டோப்லிதலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் டூபிளசிஸ்-விராட் கோஹ்லி முதல் விக்கெட்டிற்கு 148 ரன் குவித்தனர். டூபிளசிஸ் 43 பந்தில், 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆக விராட் கோஹ்லி நாட் அவுட்டாக 82 ரன் (49 பந்து,6 பவுண்டரி, 5 சிக்சர்), மேக்ஸ்வெல் 12 ரன் (3 பந்து, 2 சிக்சர்) அடிக்க 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்த பெங்களுரூ 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டூபிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.வெற்றிக்கு பின் அவர் கூறுகையில், பவர்பிளேயில் எங்கள் பவுலிங் சிறப்பாக இருந்தது. சிராஜ் அருமையாக செயல்பட்டார். கடைசி 2, 3 ஓவர் மேம்படுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆர்சிபிக்காக சொந்த மைதானத்தில் விளையாடுவது இதுவே முதன்முறை. குறிப்பாக கோஹ்லியுடன் பேட் செய்கிறேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதோ ஒன்று இருந்தது, ஆனால் ஒரு பேட்டராக நீங்கள் நல்ல நிலையில் இருந்தால் நீங்கள் ரன்களை எடுக்கலாம். இந்த ஆரம்பம்(வெற்றி) ஒரு அணியாக எங்களுக்கு மிகப்பெரியதாக இருக்கும், என்றார்.விராட் கோஹ்லி கூறுகையில், “வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகப்பெரும் வெற்றியாகும். 4 ஆண்டுக்கு பிறகு சின்னசாமி மைதானத்தில் எங்களது ரசிகர்கள் முன்னிலையில் விளையாடி அதில் வெற்றியும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத அளவிற்கு மைதானத்திற்கு ரசிகர்கள் அதிகமானோர் வந்துள்ளனர். அவர்களுக்காகவே இந்த போட்டியை சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்திருந்தோம். நெட் ரன் ரேட்டிற்கு தேவைப்படும் என்பதால் தான் போட்டியை விரைவாக முடிக்க முயற்சித்து 17வது ஓவரிலேயே வெற்றி பெற்றோம். பந்துவீச்சில் 17 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் திலக் வர்மா கடைசி இரண்டு ஓவர்களில் மாஸ் காட்டிவிட்டார், நிச்சயம் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும். கரண் சர்மா சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்” என்று தெரிவித்தார்.பவர் பிளேவை பயன்படுத்த தவறிவிட்டோம்: மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், “பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. குறிப்பாக பவர் பிளேவை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம். திலக் வர்மா மற்றும் இன்னும் சில பேட்ஸ்மேன்களின் முயற்சியால் 170 ரன் எடுக்க முடிந்தது. பந்துவீச்சிலும் நாங்கள் சரியாக செயல்படவில்லை. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது, திலக் வர்மா திறமையான கிரிக்கெட் வீரர். அவர் அடித்த சில ஷாட்கள் அவரது தனித்துவத்தை காட்டியது. நாங்கள் ஓரளவிற்கு நல்ல ஸ்கோர் எடுக்க அவர் தான் காரணம். பேட்டிங்கில் சரியாக செயல்பட்டு இன்னும் கூடுதலாக 30-40 ரன் எடுத்திருந்தால் அது வெற்றிக்கு போதுமான இலக்காக இருந்திருக்கும். பும்ரா இல்லாதது பின்னடைவு தான், ஆனால் கடந்த 8 மாதங்களாக நான் பும்ரா இல்லாத அணியை தான் வழிநடத்தி வருகிறேன். அவர் இல்லாதபோது மற்ற வீரர்களில் ஒருவர் தானாக முன்வந்து பங்களிப்பை செய்து கொடுக்க முயற்சிக்க வேண்டும். எங்களிடம் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர், அவர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்குவதும் எங்கள் கடமை. அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளை திருத்தி கொண்டு சிறப்பாக விளையாட முயற்சிப்போம்” என்றார்.பிட்ஸ்... பிட்ஸ்...* 2012ம் ஆண்டுக்கு பின் மும்பை தொடர்ச்சியாக 11வது ஆண்டாக ஐபிஎல்லில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.* ஐபிஎல்லில் கோஹ்லி தனது 50வது அரைசதத்தை விளாசினார். வார்னர் 60, தவான் 49 அரைசதம் விளாசி உள்ளனர்.* இந்திய வீரர்களில் கோஹ்லி 150+ ஸ்டிரைக் ரேட்டில் 23 அரை சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் ரோகித்சர்மா 22, டோனி, சுரேஷ் ரெய்னா தலா 19 அரைசதம் அடித்துள்ளனர்.* மும்பையை ஆர்சிபி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வீழ்த்தி உள்ளது. இதற்கு முன் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்சிடம் மும்பை இதேபோல் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.