டெல்லியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது; தொடரை வெற்றியுடன் தொடங்குவது மகிழ்ச்சி: கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி

தினகரன்  தினகரன்
டெல்லியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது; தொடரை வெற்றியுடன் தொடங்குவது மகிழ்ச்சி: கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி

லக்னோ :ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மேயர்ஸ் 14 ரன்கள் எடுத்திருந்த போது டெல்லி அணி வீரர் கலீல் அகமது சுலபமான கேட்ச் ஒன்றை தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மேயயர்ஸ், டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 38 பந்துகளில் 73 ரன்களை விளாசினார். இதையடுத்து தீபக் ஹூடா 17 ரன்களிலும், குர்னல் பாண்டியா 15 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரன் தன் பங்கிற்கு 3 சிக்சர்கள் விளாசி 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியில் ஆயுஷ் பதோனி 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். அவர் ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஒரு பந்துக்காக உள்ளே இம்பேக்ட் வீரராக வந்த கிருஷ்ணப்பா கௌதம் சிக்சர் அடித்தார். இதனால் 20 ஓவர் டிவில் லக்னோ 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 12 ரன்களில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் டக் அவுட்டாகியும், சர்பிராஸ் கான் 4 ரன்களிலும் வெளியேற, கேப்டன் வார்னர் மட்டும் நிலைத்து விளையாடி அரைசதம் கடந்தார். லக்னோ அணியின் மார்க் வுட் வேகத்தை டெல்லி வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். ரூசோவ் 30 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் டெல்லியால் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிக்கு பின் பேட்டியளித்த லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் அளித்த பேட்டி: இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆடுகளத்தை பற்றிய எந்த ஒரு அனுமானமும் எங்களிடம் இருக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையை எடுத்துக்கொண்டு இனி ஒரு மாற்றங்களில் சிறப்பாக செயல்படுவோம். மேயர்ஸ் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று இறங்கினோம் அதை செயல்படுத்தி ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்தோம்.டெல்லி அணியின் துவக்கமும் சிறப்பாக இருந்தது. மார்க் வுட் தனது புயல் வேக பந்துவீச்சின் மூலம் ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பிவிட்டார். இதுபோன்ற பந்துவீச்சு ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளருக்கும் கனவு போன்றது. இன்றைய நாள் மார்க் வுட்டின் நாளாக அமைந்தது. மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் புதிய சவாலுக்கு தயாராக இருக்க வேண்டும். இந்த வெற்றி மகிழ்ச்சி. ஆனால் இந்த வெற்றியை பற்றி நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை.பேட்டிங், பந்துவீச்சு என பலத்துடன் இருக்கும் லக்னோவை வரும் 3ம் தேதி சிஎஸ்கே அணி எதிர்கொள்ள போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டனர்: தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ஆரம்பத்தில் டெல்லி பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். பவர்-பிளே ஓவர்கள் நன்றாக அமைந்தது. ஆனால் சில கேட்ச்கள் தவறவிட்டதால் ஆட்டம் எங்களிடம் இருந்து மாறியது. அதன் பிறகு லக்னோ பேட்ஸ்மேன்கள் நிறுத்தவே இல்லை. 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். எங்களது திட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டார்கள். மார்க் வுட் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார். அவருடைய வேகத்திற்கு ஈடு இணையே இல்லை என்கிற அளவிற்கு இன்றைய போட்டியில் செயல்பட்டார். கைல் மேயர்ஸ் அபாயகரமான பேட்ஸ்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம். அதிக ஆற்றல் கொண்ட பேட்ஸ்மேன். அடுத்த போட்டியை டெல்லி மைதானத்தில் ஆடுகிறோம். அங்கு எங்களது ஆட்டத்தை திரும்ப பெறுவோம்” என்றார்.

மூலக்கதை