இன்னும் 20 ரன் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி

  தினகரன்
இன்னும் 20 ரன் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி

அகமதாபாத்: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் ெதாடர் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சருடன் 92 ரன் விளாசினார். மொயின் அலி 23, பென் ஸ்டோக்ஸ் 7, ஷிவம் துபே 19, அம்பத்தி ராயுடு 12, டோனி நாட்அவுட்டாக 14 ரன் எடுத்தனர். குஜராத் பவுலிங்கில், முகமது ஷமி, ரஷித்கான், அல்சரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் விருத்திமான் சகா 25 (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்னில் ஹங்கர்கேக்கர் பந்தில் கேட்ச் ஆனார். பீல்டிங்கின் போது வில்லியம்சன் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக இம்பேக்ட் என்ற புதிய விதியின் படி களம் இறங்கிய சாய்சுதர்சன் 22 (17 பந்து) ரன்னில் வெளியேற பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னிலும், விஜய்சங்கர் 27 ரன்னிலும் அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் 36 பந்தில், 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன் விளாசி வெளியேறினார். கடைசி 2 ஓவரில், 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தீபக் சாஹர் வீசிய 19வது ஓவரில், ரஷித்கான் ஒரு சிக்சர், பவுண்டரி விளாச 15 ரன் எடுத்தனர். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவையான நிலையில், தேஷ்பாண்டே முதல் பந்தை வைடாக வீச அடுத்த பந்தில் திவாட்டியா சிக்சரும், 3வது பந்தில் பவுண்டரியும் விரட்டினார். 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்த குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. ரஷித்கான் 10 (3பந்து), திவாட்டியா 15 (14பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர். ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடந்த சீசனில் 2 போட்டியிலும் குஜராத்திடம் வீழ்ந்த சென்னை, நேற்று 3வது போட்டியிலும் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது.தோல்விக்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி அளித்த பேட்டி: நாங்கள் இன்னும் 15-20 ரன் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பனி இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்திருக்கலாம். ருதுராஜ் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரது பேட்டிங் டைமிங் மிக அருமையாக இருந்தது. அவரின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இளைஞர்கள் அடுத்து அடி எடுத்து வைப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக வருவார்கள் என்று நம்பலாம். ஆனால் ஒரு விஷயம் நோபால் என்பது பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே அவர்கள் இந்த விஷயத்தில் தங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஹங்கர்கேக்கரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அவர் நல்ல பந்துவீச்சாளராக வருவார். இரண்டு இடது கை வீரர்கள் வேண்டுமென்று நினைத்தேன். ஷிவம் துபே தேர்வாக இருந்தது, என்றார்.

மூலக்கதை