மியாமி ஓபன் டென்னிஸ்: பைனலுக்கு எலெனா ரைபகினா தகுதி

தினகரன்  தினகரன்
மியாமி ஓபன் டென்னிஸ்: பைனலுக்கு எலெனா ரைபகினா தகுதி

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால் இறுதி போட்டியில், 33 வயதான செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 28 வயதான ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என கிவிட்டோவா கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 6-3 என எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கிவிட்டோவா 6-3 என கைப்பற்றினார். முடிவில் 6-4,3-6,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கிவிட்டோவா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் அவர் நாளை அதிகாலையில், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை எதிர் கொள்கிறார். இன்று காலை நடந்த அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தார். ஆடவர் ஒற்றையரில் இன்று நடந்த கால் இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் 19 வயதான கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால் இறுதியில் ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 6-3, 6-2 என அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வென்றார்.

மூலக்கதை