மும்பை மாதோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் தாக்கரேயுடன் ரஜினி திடீர் சந்திப்பு

தினகரன்  தினகரன்
மும்பை மாதோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் தாக்கரேயுடன் ரஜினி திடீர் சந்திப்பு

மும்பை: முன்னாள் முதல்வரும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவருமான  உத்தவ் தாக்கரேயை மும்பை புறநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர்  ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ்  தாக்கரே  மும்பை பாந்த்ராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் வசித்து  வருகிறார். அவரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். சிவசேனா நிறுவனர்  பால்தாக்கரே மீது நடிகர் ரஜினி காந்த் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதே போல் அவரது குடும்பத்துடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் நேற்று பால்தாக்கரே மகனும், முன்னாள்  முதல்வருமான உத்தவ் தாக்கரேவை மாதோஸ்ரீ இல்லத்திற்கு சென்று ரஜினி சந்தித்து பேசினார்.  மாதோஸ்ரீ வந்த ரஜினி காந்த்தை உத்தவின் மனைவி ரஷ்மி மற்றும் மகன்கள் ஆதித்ய தாக்கரே, தேஜஸ் ஆகியோர் வரவேற்றனர். இது  தொடர்பாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சிவசேனா உத்தவ் அணி எம்எல்ஏவுமான  ஆதித்ய தாக்கரே டிவிட்டரில் ரஜினியை தனது குடும்பத்தினர் பூங்கொத்து  கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்பது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார். மீண்டும் ஒருமுறை ரஜினிகாந்த் ஜி மாதோஸ்ரீக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் அதில் ஆதித்ய தாக்கரே குறிப்பிட்டிருந்தார். முன்னதாக பால்தாக்கரேவை கடந்த 2010ம் ஆண்டு அக்டோபரில் மாதோஸ்ரீ இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை