மும்பை இந்தியன்சை வீழ்த்தியது யுபி வாரியர்ஸ்

தினகரன்  தினகரன்
மும்பை இந்தியன்சை வீழ்த்தியது யுபி வாரியர்ஸ்

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்று மோதிய யுபி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. ராஜேஷ்வரி, சோபி, தீப்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவரில் 127 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 35 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். இஸ்ஸி வாங் 32 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 25 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜின்டிமணி கலிதா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வாரியர்ஸ் பந்துவீச்சில் சோபி எக்லஸ்டோன் 3, தீப்தி ஷர்மா, ராஜேஷ்வரி கெயக்வாட் தலா 2, அஞ்சலி சர்வனி 1 விக்கெட் வீழ்த்தினர்.  இதைத் தொடர்ந்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் தொடக்க வீராங்கனைகள் தேவிகா வைத்யா 1 ரன், கேப்டன் அலிஸ்ஸா ஹீலி 8 ரன்னில் வெளியேற, அந்த அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. கிரண் 12 ரன்னில் ஆட்டமிழக்க, வாரியர்ஸ் 27 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், உறுதியுடன் போராடிய தாஹ்லியா மெக்ராத் 38 ரன், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன் எடுத்து அமெலியா கெர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, போட்டி விறுவிறுப்பானது. கடைசிகட்ட பரபரப்பை தீப்தி - சோபி ஜோடி பதற்றமின்றி சமாளிக்க, வாரியர்ஸ் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து நடப்பு தொடரில் மும்பை இந்தியன்சுக்கு முதல் தோல்வியை பரிசளித்தது. தீப்தி 13, சோபி 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் அமெலியா 2, இஸ்ஸி, பிரன்ட், ஹேலி மேத்யூஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தீப்தி ஆட்ட நாயகி விருது பெற்றார்.

மூலக்கதை