ராகுல் - ஜடேஜா பொறுப்பான ஆட்டம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்
ராகுல்  ஜடேஜா பொறுப்பான ஆட்டம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், கே.எல்.ராகுல் - ரவீந்திர ஜடேஜா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் ஆஸி. இன்னிங்சை தொடங்கினர். ஹெட் 5 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் வெளியேற, மார்ஷ் உடன் கேப்டன் ஸ்மித் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது. ஸ்மித் 22 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் கீப்பர் ராகுல் வசம் பிடிபட்டார்.அடுத்து மார்ஷ் - லாபுஷேன் ஜோடி 52 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட மார்ஷ் 81 ரன் (65 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் சிராஜ் வசம் பிடிபட்ட பிறகு தான் இந்திய வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். லாபுஷேன் 15, இங்லிஸ் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுப்பு நடத்தினர். ஆஸ்திரேலியா 35.4 ஓவரில் 188 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஸ்டார்க் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. அணி 19 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.இந்திய பந்துவீச்சில் ஷமி, சிராஜ் தலா 3, ஜடேஜா 2, ஹர்திக், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 10.2 ஓவரில் 39 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இஷான் 3, கில் 20, கோஹ்லி 4, சூரியா (0) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.இந்த நிலையில், கே.எல்.ராகுல் - ஹர்திக் பாண்டியா ஜோடி 5வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 44 ரன் சேர்த்தது. ஹர்திக் 25 ரன் எடுத்து ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் கிரீன் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலியாவின் கை ஓங்கிய நிலையில், ராகுல் - ஜடேஜா ஜோடி பொறுப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றியது. இவர்களைப் பிரிக்க ஆஸி. தரப்பு மேற்கொண்ட எந்த வியூகமும் பலனளிக்கவில்லை. ராகுல் 73 பந்தில் அரை சதம் அடித்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டார். இந்தியா 39.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராகுல் 75 ரன் (91 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 45 ரன்னுடன் (69 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 3, ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். தனது 300வது சர்வதேச போட்டியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி விசாகப்பட்டணத்தில் நாளை நடைபெறுகிறது.

மூலக்கதை