லாரா - கார்ட்னர் அதிரடி குஜராத் ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
லாரா  கார்ட்னர் அதிரடி குஜராத் ரன் குவிப்பு

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் போட்டியில், லாரா வுல்வார்ட் - ஆஷ்லி கார்ட்னர் ஜோடியின் அதிரடியால் குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் குவித்தது. பிராபோர்ன் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேப்பிடல்ஸ் கேப்டன் லான்னிங் முதலில் பந்துவீச முடிவு செய்தார். சோபியா டங்க்லி, லாரா வுல்வார்ட் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். சோபியா 4 ரன் எடுத்து ஜோனசன் பந்துவீச்சில் மரிஸான் கப் வசம் பிடிபட்டார். அடுத்து லாராவுடன் இணைந்த ஹர்லீன் தியோல் 31 ரன் எடுத்து வெளியேறினார். குஜராத் 9.5 ஓவரில் 53 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், லாரா - கார்ட்னர் ஜோடி அதிரடியாக விளையாடி 81 ரன் சேர்த்தது. லாரா 57 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அருந்ததி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஹேமலதா 1 ரன் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழக்க, குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் குவித்தது. கார்ட்னர் 51 ரன்னுடன் (33 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் ஜெஸ் ஜோனசன் 2, மரிஸான், அருந்ததி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.

மூலக்கதை