ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதல்: சென்னையில் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடுசவுராஷ்டிரா மோதல்: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை:  ரஞ்சி கோப்பை நடப்புத் தொடரின் கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் மோதும் ஆட்டம் இன்று சென்னையில் தொடங்குகிறது. ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் டிச.13ம் தேதி நாட்டின் 12 நகரங்களில் தொடங்கியது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில்  தமிழ்நாடு அணி பி பி ரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு விஜய் ஹசாரே ஒருநாள் தொடர், சையத் முஷ்டாக் அலி டி20 என உள்நாட்டு தொடர்களில்  தமிழ்நாடு  வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆனால் ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில்  முதல் 5 ஆட்டங்களில் தமிழ்நாடு ஒரு வெற்றியை கூட பெறவில்லை. தமிழ்நாடு விளையாடிய முதல் 5 ஆட்டங்களில் 4ல் டிரா, ஒன்றில் தோல்வி  என பி பிரிவு புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கூடவே காலிறுதி வாய்ப்பையும்  இழந்தது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற 6வது சுற்று ஆட்டத்தில்  அசாமை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் வென்று, தமிழ்நாடு முதல் வெற்றியை சுவைத்தது. இந்நிலையில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு  அணி கடைசி மற்றும் 7வது சுற்று லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது. சவுராஷ்டிரா அணி பி பிரிவில்  6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 26 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் 5 ஆட்டங்களில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத  ஜெயதேவ் உனத்கட் தலைமையிலான  சவுராஷ்டிரா அணி 6வது லீக் ஆட்டத்தில் ஆந்திராவிடம் படுதோல்வியை சந்தித்தது.  ஆனாலும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. நட்சத்திர ஆட்டக்காரர்கள்  புஜாரா, உனத்கட் உட்பட பலரும் சிறப்பாக விளையாடுகின்றனர். இவர்களுடன் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவும் இந்த ஆட்டத்தில் கேப்டனாக களம் காண உள்ளது அணிக்கு கூடுதல் பலம். இந்த ஆட்டத்தில் வென்றாலும், தோற்றாலும் தமிழ்நாடு அணிக்கு பாதிப்பில்லை. ஆனாலும் சொந்த மண்ணில்  ஆறுதல் வெற்றிகளுடன் தொடரை முடிக்க தமிழக வீரர்கள் முனைப்புக் காட்டுவார்கள். ஆனால் சவுராஷ்டிராவுக்கு அபார வெற்றி அவசியம். ஏனென்றால் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா 25 புள்ளிகளுடன் காலிறுதிக்கு நேரடியாக முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று முதல் மும்பையை எதிர்கொள்கிறது. அதனால் முதல் இடத்தில் உள்ள சவுராஷ்டிரா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ளது.* மீண்டும்  ஜடேஜாநீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா,  சவுராஷ்டிரா அணிக்கு கேப்டனாக இன்று களம் காண உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ஜடேஜாவுக்கு,  இந்த ஆட்டம் ஐபிஎல் உள்ளிட்ட எதிர்வரும் தொடர்களுக்கு பயிற்சி ஆட்டமாக இருக்கலாம். கூடவே உடல்  திறனை சோதிக்கும் வாய்ப்பாகவும் அமையும். அதிலும் வெற்றி கட்டாயம் என்ற நிலையில் சவுராஷ்டிரா இருப்பதால் ஜடேஜா வருகை அந்த அணிக்கு கூடுதல் தெம்பை தரலாம். ஆகஸ்ட் மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பைக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார்.

மூலக்கதை