ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்;...

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்;...

சென்னை,

இளைஞர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை முதல் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நள்ளிரவும் தொடர்ந்தது. முதல்–அமைச்சர் பன்னீர் செல்வம் தங்களை சந்தித்து பேசும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இளைஞர்களுடன் முதல்–அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சம்மதித்தது. இதையடுத்து பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் அமைச்சர் பாண்டியராஜனும் பங்கேற்றார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர்கள் நிருபர்களிடம் கூறுகையில், இளைஞர்களின் போராட்டத்தை தமிழக அரசு மதிக்கிறது. அவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெற இளைஞர்கள் போராட்டத்தில் தமிழக அரசும் களம் இறங்கும். மத்திய அரசுடன் பேசி அவசர சட்டம் கொண்டு வரப்படும். இதுதொடர்பாக முதல்–அமைச்சர் விரிவான அறிக்கை அளிப்பார். ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும். எனவே இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றனர்.

போராட்டம் தொடருமா?

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போராட்டக்குழுவினர் கூறுகையில், முதல்–அமைச்சர் அறிக்கைக்கு பிறகே போராட்டத்தை கைவிடுவதா? அல்லது தொடர்வதா? என அடுத்த கட்ட முடிவு செய்யப்படும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்றனர்.

மூலக்கதை