ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நீடிக்கிறது

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நீடிக்கிறது


சென்னை, 
தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் இரவும் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. 
ஜல்லிக்கட்டு காளைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் 2011ம் ஆண்டு சேர்த்தது. 2014ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக கட்டுப்பாடுகளுடன்கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. முக்கிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. ஆனாலும் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா அமைப்பு வழக்கு தொடுத்ததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 
காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் இளைஞர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, காஞ்சீபுரம் உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக இரவு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக இரவும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் இரவு வரையில் நீடித்து வருகிறது.
பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதிலும், அதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என்பதிலும் மக்கள் தீவிரமாக உள்ளனர். தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கவேண்டும் என்ற போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செல்போன் டார்ச் வெளிச்சத்திலும், மெழுவர்த்தி ஏந்தியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

மூலக்கதை