போராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும் - முதல் அமைச்சர் பன்னீர் செல்வம்

தினத்தந்தி  தினத்தந்தி
போராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும்  முதல் அமைச்சர் பன்னீர் செல்வம்


சென்னை, 
 தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கவேண்டும், பீட்டாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மெரினாவில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் இரவும் நீடித்து வருகிறது. அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக கூறிவிட்டனர். 
தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற நிலையில் மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டது. இதற்கிடையே லேசான தடியடி சம்பவமும் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ‘நீங்கள் விவேகானந்தர் இல்லம் அருகில் போராட்டம் நடத்துங்கள். உங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்‘ என்றனர். ஆனால் இதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 ஒரு கட்டத்தில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சாலையில் நின்றவர்களை அப்புறப்படுத்தி கடற்கரைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து நகர மறுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.   
பேச்சுவார்த்தை
போராட்டம் நடைபெற்ற நிலையில் போராட்ட குழுவினரை அழைத்து முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமரிடம் எடுத்து கூற நேரம் கேட்கப்பட்டுள்ளது. காலையில் நேரம் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்கள். தமிழக மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறுவேன். பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடத்த உரிய சட்ட திருத்தத்தை கொண்டு வர பிரதமரை வலியுறுத்துவேன். சற்று நேரத்திற்கு முன்பு போராட்டக்காரர்கள் என்னை சந்தித்தார்கள். நான் சொன்னவற்றை கேட்டு அவர்கள் திருப்தி அடைந்து இருக்கிறார்கள் என்றார். 
மேலும் மத்திய அரசு கவனம் செலுத்தும் என நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு பன்னீர் செல்வம் அவர்கள் பதிலளிக்கையில்,  எந்த பிரச்சினையாக இருந்ததாலும் முழு நம்பிக்கையுடன் தான் இறங்க வேண்டும். வார்தா புயல் நிவாரண நிதியை தரும். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக எடுத்துக்கொள்ள கூடாது. நம்முடைய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எந்த ஒரு பிரச்சினையும் போராடி பெற்று தந்து இருக்கிறார். அவரது வழியில் செல்லும் இந்த அரசு அனைத்தையும் பெற்று தரும் என்றார்.    டெல்லி புறப்பட்ட முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்களின் உணர்வுப்பூர்வமான கோரிக்கையை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்; ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்றார். 
போராட்டம் தொடரும் 
முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய போராட்டக்குழுவினர் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடக்கும் போராட்டம் தொடரும் என்று கூறிஉள்ளனர். 

மூலக்கதை