ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு இலங்கை வரை நீண்டது! நல்லூரில் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு இலங்கை வரை நீண்டது! நல்லூரில் ஆர்ப்பாட்டம்


யாழ்ப்பாணம், 
 ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
சமூக ஊடகங்கள் மூலம் தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு அளிக்கும்படி உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களை கேட்டுக் கொண்டதால் இந்த போராட்டம் தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. 
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ் சங்கங்கள் அங்குள்ள மக்களிடம் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடந்து வருகிறது.
 முக்கிய நாடுகள் பலவற்றில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இப்பிரச்சினை தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இலங்கை யாழ்ப்பாணத்தில், ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் முருகன் ஆலய பகுதியில் மாலை இளைஞர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் எவ்வித குழப்பங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர். 
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரியம், பீட்டாவை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பினர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "அலங்கா 'நல்லூர்' ஆடும் வரை ஈழ 'நல்லூர்'  அடங்காது", "தமிழனின் தனித்துவத்தை தடுக்காதே", "தலைகள் குனியும் நிலையில் இனியும் தமிழன் இல்லையடா", "பீட்டா எம் இனத்தின் எதிரி - நின்று பார் எம் நெருப்பின் முன்னால்", "பண்பாட்டை சிதைக்காதே - எம் பண்பாட்டை மறவோம்",   ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி இருந்தனர்.  
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சமூகவலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்ற போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை