டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு திமுக செயல்தலைவர்...

தினத்தந்தி  தினத்தந்தி
டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு திமுக செயல்தலைவர்...

சென்னை,
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டக்களத்திற்கு இளைஞர்கள், பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் முக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
சென்னை மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தை கைவிட வேண்டும் எனில் 3 முக்கிய கோரிக்கைகளை இளைஞர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து  ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். இது தொடர்பாக இது குறித்து முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். சட்டதிருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.அவசர சட்டத்தினை பிறப்பிக்கும்படி பிரதமரை வலியுறுத்த உள்ளேன்.மாணவர்கள் இளைஞர்களின் போராட்டம் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. என கூறி உள்ளார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
போராடி கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மாணவர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரநிதிகளுடன் சென்று பிரதமரை, முதலமைச்சர் சந்திப்பது ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் - இவ்வாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை