ஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் இளைஞர்கள் திட்டவட்டம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் இளைஞர்கள் திட்டவட்டம்

சென்னை, 
 ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
சென்னை மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெரினாவில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 
சென்னை மெரினாவில் மட்டும் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர். சென்னை, வேலூர், திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் சிலர் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம் நடத்துக்கின்றனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார்.  ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். சட்டதிருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. அவசர சட்டத்தினை பிறப்பிக்கும்படி பிரதமரை வலியுறுத்த உள்ளேன். மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் கூறிஉள்ளார். 
 சமாதான பேச்சுவார்த்தை
சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களுடன் மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒலிப்பெருக்கியின் மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை பிரதமரை சந்திக்க முதல் -அமைச்சர் டெல்லி செல்கிறார் என காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
இளைஞர்கள் திட்டவட்டம்
இதனையடுத்து முதல்-அமைச்சர் அறிக்கை தந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் தொடரும் என மெரினாவில் போராட்டம் நடத்துபவர்கள் கூறிஉள்ளனர். முதல்வர் அறிக்கை குறித்து காவல் துணை ஆணையர் அறிவித்த பிறகு ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். போராட்டத்தை அமைதியான முறையில் தொடர்ந்து நடத்துவோம் என மெரினா போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். 
போக்குவரத்திற்கு எந்தஒரு இடையூறும் இல்லாமல் எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் உறுதியளித்து உள்ளனர். 
ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என்ற அறிவிப்பு வந்தவுடன் போராட்டத்தை கைவிடுவோம் என மெரினா போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். 
வாடிவாசல் திறக்கும் வரையில் 
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர். 

மூலக்கதை