கொடுங்கையூரில் காதலியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை கொன்று பார்சல் கட்டி பிணம்...

தினத்தந்தி  தினத்தந்தி
கொடுங்கையூரில் காதலியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை கொன்று பார்சல் கட்டி பிணம்...

ரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் குமார் ராஜா. இவரது மகன் பிரவின்குமார் (23) ஆட்டோ ஓட்டி வந்தார்.

ஓட்டேரி தாசா மாக்கானை சேர்ந்த ஷபனா (21) என்ற பெண்ணை கடந்த 6 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்தார். இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி முதல் பிரவின் குமாரை காணவில்லை. ஆட்டோவில்  சவாரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் வீடு  திரும்பவில்லை. 11-ந்தேதி  காலைவரை காணவில்லை என்று கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஷபனா  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கொசப் பேட்டையை சேர்ந்த கணேசன் (22) அடிக்கடி பிரவின்குமார் வீட்டிற்கு வந்து செல்வதும் இருவரும் சமீபகாலமாக நெருங்கி பழகி வந்ததும் தெரிந்தது.இதையடுத்து  போலீசார் விசாரணை கணேசன் பக்கம் திரும்பியது.

கணேசனை தேடி சென்ற போது அவர் தலை மறைவானது தெரிந்தது. இதனால் போலீசாருக்கு கணேசன் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் கணேசனை பற்றிய விவரங்களை சேகரித்தனர். அவர் ஓட்டேரியில் ஒரு கூரியர் கம்பெனியின் ஏஜெண்டாக செயல்பட்டதாகவும் அதற்கான அலுவலகம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கூரியர் அலுவலகத்திற்கு சென்று போலீசார் துப்பு துலக்கினார்கள். அங்கு காணாமல் போன பிரவின்குமாரின் செல்போனை கண்டெடுத்தனர். அதில் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். அதில் கணேசன் போன் நம்பர் இருந்தது.

இதனால் கணேசனை விசாரித்தால் பிரவின் குமார் பற்றிய தகவல் கிடைக்கும் என்று கருதி அவரது நண்பர்களை அணுகினார்கள். சிவானந்தம், சாஸ்தா, விஜய் ஆகிய 3 பேர் கணேசனின் நெருங்கிய நண்பர்கள் என தெரிய வந்தது. அவர்களைபிடித்து விசாரணை நடத்தியதில் பிரவின் குமார் கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வந்தது.

ஷபனாவை கணேசன் காதலித்து வந்த போதும் அவருக்கு வேறு வாலிபருடன் திருமணமான விஷயம் தெரியாமல் இருந்தது.  சமீபத்தில் ஷபனாவுக்கு திருமணம் நடந்த தகவல் கணேசனுக்கு தெரிந்தது. அவர் யாரை திருமணம் செய்தார் என்ற விவரங்களை சேகரிக்க தொடங்கினார். பிரவின் குமாரை திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்துவதை அறிந்த அவர் பிரவின்குமாரிடம் எப்படி பழகுவது என்று திட்டமிட்டார்.

வீட்டை கண்டுபிடித்து தான் பிரபல செல்போன் நிறுவன பிரதிநிதி என்று அறிமுகமாகி இலவசமாக சிம்கார்டு வழங்கினார். நாளடைவில் இருவரும் நண்பர்களாக பழகினார்கள். ஆட்டோவை விற்று விட்டு கார் வாங்க கடன் உதவி செய்ய வேண்டும் என்று பிரவின்குமார் கணேசனிடம் கேட்டுள்ளார். அவர்தான் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.

நண்பர்களாக பழகினாலும் தன் மனதில் பழிவாங்க வேண்டும் என்ற வெறியுடனே கணேசன் இருந்துள்ளார். இது பிரவின்குமாருக்கு கொஞ்சமும் தெரியாது. இந்த நிலையில் 10-ந்தேதி இரவு பிரவின்குமாரை நைசாக அழைத்து கொண்டு தனது கூரியர் அலுவலகத்திற்கு கணேசன் வந்தார்.

அங்கு கணேசனின் நண்பர்கள் சிவானந்தம், சாஸ்தா, விஜய் ஆகியோரும் இருந்தனர். 4 பேரும் மது வாங்கி பிரவின் குமாருக்கு கொடுத்தனர். மது மயக்கத்தில் இருந்த போது 4 பேரும் சேர்ந்து பிரவின் குமாரை உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினார்.

நான் காதலித்த பெண்ணை நீ திருமணம் செய்வதா என  ஆவேசமாக தாக்கி கொன்றார்கள். பிரவின் குமார் பிணமானதை உறுதி செய்த அவர்கள் கூரியர் பார்சல் செய்யும் பிளாஸ்டிக் கவரை கொண்டு பேக்கிங் செய்தனர். பிணத்தை அங்கேயே வைத்து விட்டு சென்றனர்.

2 நாட்களுக்கு பிறகு (12-ந்தேதி) கூரியர் ஆபீசில் வேலை செய்யும்  தினேஷ், ஜான்சன் ஆகியோரை அழைத்து கொண்டு கூரியர்  ஆபீசுக்கு சென்றனர். பார்சலாக கட்டப்பட்டு  பிரவின் குமாரின் உடலை ஒரு வாகனத்தில் ஏற்றினர். பெரம்பூர் செல்லக் கூடிய வழியில் கழிவு நீர் கால்வாயில் பிணத்தை  வீசி  சென்றனர்.

மேற்கண்ட தகவல்கள்  போலீஸ் விசாரணையில் கணேசனின் நண்பர்கள் தெரிவித்ததை யடுத்து  பிணம்  வீசப்பட்ட கால் வாய்க்கு நேற்றிரவு போலீசார் சென்றனர்.  எந்த இடத்தில்  பிரவின் குமார் உடல் வீசப்பட்டது என்பதை நண்பர்கள் காட்டி கொடுத்தனர். இதையடுத்து போலீசார் பிரவின் குமாரின் உடலை மீட்டனர். அவரது உடல் அழுகாமல் இருந்தது. கொலை செய்யப்பட்டு 8 நாட்கள் ஆகியும் பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்டு இருந்ததால்  உடல்  முழுவதும் உள்பட அனைத்து பாகங்களும் அழுகாமல் இருந்தன. இதைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணேசனுக்கு உறுதுணையாக இருந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்கள் சிவானந்தம், சாஸ்தா,  விஜய்  மற்றும் தினேஷ் ஜான்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கணேசனை  தேடி வருகிறார்கள்.

மூலக்கதை