150 பேர் உயிரிழந்த இரு ரெயில் விபத்துக்கள் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை

தினத்தந்தி  தினத்தந்தி
150 பேர் உயிரிழந்த இரு ரெயில் விபத்துக்கள் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை


பாட்னா/புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே கடந்த நவம்பர் 20-ம் தேதி இந்தூர்–பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 150 பேர் பலி ஆனார்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீண்டும் கான்பூர் அருகே டிசம்பர் 28-ம் தேதி அஜ்மீர் - சீல்டா விரைவு ரெயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து நேரிட்டது. 40 பேர் காயம் அடைந்தனர். இவ்விரு ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே போலீஸ், உ.பி. மற்றும் பீகார் மாநில போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையின் முக்கிய தகவலாக இவ்விரு ரெயில் விபத்துக்கள் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு உள்ளது என தெரியவந்து உள்ளது என பீகார் காவல்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா - நேபாளம் எல்லை மோதிகாரியில் இருந்து கிரிமினல்கள் உமாசங்கர் படேல், மோதிலால் பஸ்வான் மற்றும் முகேஷ் யாதவ் கைது செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு உள்ளது வெளியாகி உள்ளது. இவர்கள் துபாய் இருந்து கொண்டு பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட நேபாள நாட்டவரின் உத்தரவின் பெயரில் செயல்பட்டு உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது. 
பீகார் மாநில போலீஸ் எஸ்.பி. ஜிதேந்தர் ரானா பேசுகையில், “கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி கோராசாகான் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் குக்கர் வெடிகுண்டை வைத்த விவகாரம் தொடர்பாக இம்மூன்று கிரிமினல்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்றியதாக வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்,” என்று கூறிஉள்ளார். மூவரில் ஒருவன் இந்தூர்- பாட்னா எஸ்பிரஸ் ரெயில் மற்றும் அஜ்மீர் - சீல்டா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கிய பகுதியில் நாங்கள் வெடிப்பொருட்களை வைத்தோம் என வாக்குமூலம் அளித்து உள்ளான். 
இத்தகைய தகவலானது பாகிஸ்தான் உளவுத்துறையால் நாசவேலை நடத்தப்பட்டு உள்ளது என்பதை காட்டுகிறது. 
நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்சில் இருந்து சதிதிட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற பீகார் காவல் துறையின் இப்போதைய தகவலானது தேசிய புலனாய்வு பிரிவை இச்சம்பவங்களில் கவனம் செலுத்த வைத்து உள்ளது
“எங்களுடைய விசாரணை குழுவானது பீகார் மாநில காவல் துறையுடன் தொடர்பில் உள்ளது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம். இவ்விவகாரத்தில் ஐ.எஸ்.ஐ.யின் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் தெரியவந்தால் விசாரணையை நாங்கள் கையில் எடுப்போம்,” என்று தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து உள்ளது. இந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் ரெயில்வே தண்டவாளங்களைல் ரெயில்வே போலீஸ் சோதனை மேற்கொண்டதால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு உள்ளது. ரெயில் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமான சதிவேலைகள் செய்யப்பட்டு உள்ளது. 
பல்வேறு பகுதிகளில் ரெயில்வே தண்டவாளங்கள் சிதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிரதமர் மோடி லக்னோ செல்ல இருந்த நிலையில் ரெயில் விபத்து நேரிட்டதால் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்தது. 
கடந்த அக்டோபர் மாதம் பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் குக்கர் வெடிகுண்டு உள்ளூர் மக்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது. 
நேபாளத்தை சேர்ந்த பிரிஜ் கிஷோர் கிரி என்பவனிடம் இருந்து இவர்கள் மூவரும் ரூ. 3 லட்சம் வாங்கி உள்ளனர். இவனும் நேபாளம் போலீசால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு உள்ளான். அவனுடன் முஜாகீர் அன்சாரி மற்றும் சாம்பூ என இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்து வரும் நேபாளம் போலீசார் ஐ.எஸ்.ஐ. தொடர்பு குறித்தான முக்கிய தகவல்களை பீகார் காவல் துறையுடன் பகிர்ந்துக் கொண்டு உள்ளனர். ரெயில்வே காவல்துறையும் பீகார் காவல்துறையுடன் தொடர்பில் உள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை