ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்

மதுரை,


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு அனுமதி கிடைக்காவிட்டால், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக எதிர்பாராத திருப்பமாக மாணவர்களும், இளைஞர்களும் களம் இறங்கினர். இதனால் போராட்டம் விசுவரூபம் எடுக்க பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தவிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக் கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அத்தோடு போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என நினைத்தவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில், மாணவ- மாணவிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஜல்லிக்கட்டை முறையாக நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் அறிவித்தனர்.

நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுப்பெற  மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களோடு, இளைஞர்களும் திரண்டு  வந்து ஆதரவு  அளித்தனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இந்த போராட்டம் தீவிர மடைந்தது.

அலங்காநல்லூரில் 3 நாட்களாக வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று மதுரை மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். தமுக்கம் மைதானத்தில் திரளவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதன்படி இன்று காலை முதல் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகளும் அணி, அணியாக கோரிப் பாளையம் தமுக்கம் மைதானம் நோக்கி படையெடுத்தனர். இதனால் அங்கு மாணவ- மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.

மாநகர் மட்டுமின்றி தமுக்கத்தில் குவிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளும், ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.  புறநகர் பகுதி கல்லூரி மாணவ- மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்ததால், பெரியார் பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர், தமுக்கம் மைதானத்தின் முன்பு உள்ள தமிழன்னை சிலை,  தியாகிகள் தூண் ஆகியவற்றின் மீதும், எதிரே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வாசலில் உள்ள  போர்டுகளின் மீதும் ஏறி நின்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்தப்பகுதி இன்று பரபரப்பாக காணப்பட்டது.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதனால் தமுக்கம் பகுதியில் இன்று பதட்டமான சூழல் நிலவியது.  இதன் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு இருந்தது. பெருங்குடியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பெருங்குடி மெயின் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

மூலக்கதை