ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம்

தினத்தந்தி  தினத்தந்தி
ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளுக்கு நாள் மாநிலம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்திருப்பதால் மாநிலம் முழுவதும் இது தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, நெல்லை உள்பட பல மாவட்டங்களிலும் அவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த சூழலில் இன்று ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் தேசிய முன்னணியின் நகர தலைவர் குட்டிமணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலு, நகர்தலைவர் செல்வா, திருமுருகன், மன்மதன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல இளைஞர் அணி செயலாளர் ஜெரோன்குமார், தமி ழர் படை அமைப்பின் முருகானந்தம் ஆகியோர் பாம்பன் ரெயில் பாலத்தில் நடந்து சென்று தூக்குப் பாலம் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பாம்பன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சென்ற போது கடலில் குதிப்போம் என தூக்கு பாலத்தில் நின்றவர்கள் கோஷமிட பரபரப்பு ஏற்பட்டது. தெடர்ந்து அவர்களுடன்  போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக மதுரையில் இருந்து புறப்பட்ட ராமேசுவரம் பயணிகள் ரெயில் மண்டபத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை