மதவழிபாடு என்பதால் ‘ஜல்லிக்கட்டு நீதிமன்ற வரம்புக்குள் வராது’ இந்து மக்கள்...

தினத்தந்தி  தினத்தந்தி
மதவழிபாடு என்பதால்
‘ஜல்லிக்கட்டு நீதிமன்ற வரம்புக்குள் வராது’
இந்து மக்கள்...

புதுடெல்லி,

‘ஜல்லிக்கட்டு மத வழிபாடு ஆகும். எனவே அது நீதிமன்ற வரம்புக்குள் வராது’ என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கண்டனம்

அகில பாரத வித்யார்த்தி பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. அந்த அரங்கத்தின் முன்பாக இடதுசாரி சிந்தனையுள்ள மாணவர் அமைப்பினர் கூடி, இந்துவாதிகள் ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையக்கூடாது என்று, எங்களது நிகழ்ச்சியை நடத்த விடாமல் செய்தனர். டாக்டர் அன்புமணி ராமதாசையும் இதேபோல எதிர்த்தனர்.

மாணவர்கள் தங்களது எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிப்படுத்தியதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அனைத்து தரப்பினர் கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு அதில் உள்ள நியாய, அநியாயங்களை புரிந்துகொண்டு எதிர்ப்பதுதான் கருத்துரிமைக்கான களமாக அமையும். ஆனால் கருத்தே தெரிவிக்கக்கூடாது என்று எதிர்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதவழிபாடு

ஜல்லிக்கட்டு என்பது மத வழிபாடு ஆகும். அது அரசியல் அல்லது நீதிமன்ற வரம்புக்குள் வராது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது கடும் கண்டனத்துக்கு உரியது.

மராட்டிய மாநிலத்தில் உரியடி விழாவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த போதிலும் மக்கள் அதை மீறி உரியடி விழாவை நடத்தினார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.

முறியடிக்கவேண்டும்

தமிழகத்தில் இந்து தலைவர்கள் 129 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். சசிகுமார் கொலையில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகம் தலீபான்களின் கூடாரமாக இருந்து வருகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்க இருக்கிறோம்.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் என்கிற போர்வையில் இடதுசாரி சிந்தனையாளர்களும், திராவிட இயக்கத்தினரும் ஊடுருவி இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை (தமிழகத்தை பிரிப்பது தொடர்பான கோஷம்) எழுப்புகிறார்கள். இதை போலீசார் முறியடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை