ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடப்பதால் பாதிப்பு வீரர்கள்...

தினத்தந்தி  தினத்தந்தி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடப்பதால் பாதிப்பு வீரர்கள்...

புதுடெல்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதும் அணிகள் இரண்டில் ஏதாவது ஒரு அணிக்கு சொந்தமான இடத்தில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில் முடிந்த இந்த சீசனுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி மோதும் அணிகளுக்கு சொந்தமான இடத்துக்கு பதிலாக இரு அணிகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தப்பட்டது. உள்ளூரில் நடைபெறும் போட்டியில் மோதும் அணிகள் தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய இந்திய கிரிக்கெட் வாரியம் பொதுவான இடத்தில் போட்டியை நடத்தும் முடிவுக்கு வந்தது. ஆனால் போட்டி பொதுவான இடத்தில் நடப்பதால் போட்டியை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடுகளை ஆர்வமாக செய்வதில்லை.

போட்டியை காண வரும் ரசிகர்களும் மிகவும் குறைந்து விட்டதாக ரஞ்சி போட்டி வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரஜத் பாட்டியா கருத்து தெரிவிக்கையில், ‘பொதுவான இடத்தில் போட்டியை நடத்துவது என்ற திட்டம் நல்லது தான். ஆனால் இதனை அமல்படுத்துவது என்பது மூன்றாம் தரமாக இருக்கிறது. மற்ற அணிகளுக்கான போட்டியை நடத்துவதால் இந்த போட்டியை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சரியான அக்கறை காட்டுவது இல்லை. போட்டிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. உள்ளூர் அணிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்படலாம் என்பதால் தான் பொதுவான இடத்தில் போட்டி நடத்தப்படுகிறது.

ஆனால் விசாகப்பட்டினத்தில் நடந்த ராஜஸ்தான்–அசாம் அணிகள் இடையிலான ஆட்டம் 3 நாட்களுக்குள் முடிந்தது. அந்த அளவுக்கு தான் ஆடுகளத்தின் தன்மை இருந்தது’ என்றார். குஜராத் அணி வீரர் அக்‌ஷர் பட்டேல் அளித்த பேட்டியில், ‘போட்டி அட்டவணை பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது. சில போட்டிகளுக்கு இடையிலான நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருப்பதும் ஆட்டத்தை பாதிக்கிறது. அத்துடன் பொதுவான இடம் என்பதால் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் வருவதில்லை’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை