‘டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை’ டிவில்லியர்ஸ் கருத்து

தினத்தந்தி  தினத்தந்தி
‘டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை’ டிவில்லியர்ஸ் கருத்து

கேப்டவுன்,

‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை’ என்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

காயத்தால் அவதிப்படும் டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் கடந்த 6 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் எதிலும் விளையாடவில்லை. முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து உடல் தகுதியை எட்டி வரும் அவர் பல போட்டி தொடர்களில் இருந்து தொடர்ச்சியாக விலகினார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை.

டிவில்லியர்ஸ் காயத்தால் விலகியதால் டுபிளிஸ்சிஸ் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்று அசத்தியது. இதனை அடுத்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் டிவில்லியர்ஸ் விலகினார். காயம் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருவதால் உடல் வலிமைக்கு சோதனை அளிக்கும் டெஸ்ட் போட்டியில் இருந்து டிவில்லியர்ஸ் ஓய்வு பெறக்கூடும் என்று செய்திகள் வெளியாயின.

டெஸ்ட் போட்டியில் இருந்து விலகவில்லை

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் இல்லை என்று 32 வயதான டிவில்லியர்ஸ் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கேப்டவுனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மார்ச் மாதம் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் நான் விளையாடவில்லை. ஆனால் அந்த போட்டி தொடருக்கான ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளேன். டெஸ்ட் போட்டிக்கு திரும்புவேனா? என்று கேட்கிறீர்கள். எனது மனதில் உள்ள சில வி‌ஷயங்களை அமைதிப்படுத்த எனக்கு கொஞ்ச காலம் தேவையானதாகும். நாங்கள் இன்னும் உலக கோப்பையை வென்றதில்லை. 2019–ம் ஆண்டு உலக கோப்பை தான் எனது இலக்காகும். உலக கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

தற்போது டெஸ்ட் போட்டி உள்பட எந்த வகையிலான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு கிடையாது. டெஸ்ட் போட்டிக்கு திரும்பும் எண்ணம் இருக்கிறது. தற்போதையை நெருக்கடியான போட்டி அட்டவணையை பார்க்கையில் எல்லா வகையிலான போட்டியிலும் விளையாடுவது என்பது எளிதான காரியம் அல்ல. 2019–ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும். மற்ற வடிவிலான போட்டிகளில் விளையாட வேண்டியது முக்கியம் என்றாலும், உலக கோப்பை போட்டிக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி தயாராகுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை