இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘திரில்’ வெற்றி: ‘‘கேதர் ஜாதவின் ஷாட்டுகளை...

தினத்தந்தி  தினத்தந்தி
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘திரில்’ வெற்றி: ‘‘கேதர் ஜாதவின் ஷாட்டுகளை...

புனே,

இந்தியா வெற்றி

புனேயில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 351 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் யுவராஜ்சிங் (15 ரன்), டோனி (6 ரன்) உள்பட 4 முன்னணி விக்கெட்டுகளை 63 ரன்னுக்குள் இழந்து திணறியது.

இதன் பின்னர் கேப்டன் விராட் கோலி (122 ரன், 105 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்), மராட்டியத்தை சேர்ந்த கேதர் ஜாதவ் (120 ரன், 76 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோரின் மிரட்டலான பேட்டிங்கின் உதவியுடன் இந்திய அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 350 ரன்களுக்கு மேலான இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக துரத்திப்பிடிப்பது (சேசிங்) இது 3–வது முறையாகும். மற்ற அணிகள் இரண்டு முறைக்கு மேல் இச்சாதனையை செய்ததில்லை.

கோலி பேட்டி

சாதனை வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:–

63 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த நிலையில், அணியை தூக்கி நிறுத்த சிறப்பு வாய்ந்த ஒரு பார்ட்னர்ஷிப் அவசியமாக இருந்தது. அந்த சமயத்தில் நானும், கேதர் ஜாதவும் கைகோர்த்தோம். சிக்கலான சூழலை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசித்தோம். அதிரடி பாணியை கையாள்வதே தேர்ந்த வழி என்று முடிவு செய்தோம். படிப்படியாக மீண்டு 150–160 ரன்னுக்குள் 4 விக்கெட் என்ற நிலையை எட்டி விட்டால், அதன் பிறகு எதிரணி வீரர்கள் பதற்றத்திற்குள்ளாகி விடுவார்கள், நமக்கு வெற்றி வாய்ப்பு உருவாகி விடும் என்று கேதர் ஜாதவிடம் கூறினேன். அதனால் இயல்பான ஷாட்டுகளை அடித்து விளையாடும்படி சொன்னேன். அவரது சில ஷாட்டுகளை கண்டு உண்மையிலேயே வியந்து போனேன். அதை என்னால் நம்பவே முடியவில்லை. தனது உள்மனசுக்கு சரி என்று பட்டதை செய்ததாக அவர் கூறினார். அதே சமயம் ரன் எடுக்க ஓடுவதிலும் முடிந்த வரை அவரை துரிதப்படுத்தினேன்.

ஆடுகளத்தை பொறுத்தவரை அதில் எந்த தாக்கமும் இல்லை. விக்கெட்டுகளும் நல்ல பந்தில் விழவில்லை. எங்களது பேட்ஸ்மேன்கள் தவறிழைத்து விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். சொல்லப்போனால் ஆடுகளம் 2–வது இன்னிங்சில் பேட்டிங்குங்கு இன்னும் ஏதுவாகவே காணப்பட்டது. அதனால் பந்தை அடிக்கடி எல்லைக்கோட்டிற்கு தூக்கியடித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தோம். எனது பங்களிப்பில் கூடிய சிறந்த பார்ட்னர்ஷிப்பில் (5–வது விக்கெட்டுக்கு 200 ரன்) ஒன்றாக இதை கருதுகிறேன். இதற்கு முன்பு நாங்கள் 350 ரன்களை ‘சேசிங்’ செய்திருக்கிறோம். ஆனால் அப்போது நல்ல தொடக்கம் கிடைத்தது. இது போன்று 63–4 என்று மோசமான நிலையில் இருந்தது இல்லை. அந்த வகையில் இதை ஒரு விசே‌ஷமான வெற்றியாக பாவிக்கிறேன்.

ஜாதவ் ‘அற்புதம்’

கேதர் ஜாதவின் பேட்டிங்கை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அற்புதம். இங்கிலாந்தின் 4 வேகப்பந்து வீச்சாளர்களையும் திறம்பட சமாளித்தார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பலமான நெருக்கடி கொடுத்தார். நான் பார்த்தமட்டில், கணக்கிட்டு மிக கச்சிதமாக செயல்பட்ட அபாரமான இன்னிங்சில் இதுவும் ஒன்றாகும். இந்த பார்ட்னர்ஷிப் எனது மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

எந்த ஒரு தருணத்திலும், இந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்றுவிடுவோம் என்று நினைக்கவில்லை. நிலைமை எப்படி இருந்தாலும், அதில் இருந்து மீண்டு வெற்றி பெற முடியும் என்று எப்போதும் நினைப்போம். டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போதும் அப்படி தான் நம்பினோம். ஜெயித்தும் காட்டினோம். அது தான் இங்கும் நடந்துள்ளது.  இவ்வாறு விராட் கோலி கூறினார்.

தெண்டுல்கரின் சாதனை குறித்து...

ஒரு நாள் கிரிக்கெட்டில், 2–வது பேட்டிங் செய்த போது அதிக சதங்கள் அடித்திருந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (17 சதம்) விராட் கோலி சமன் செய்துள்ளார்.

தெண்டுல்கரின் பல சாதனைகளை வேகமாக நெருங்கி வருவது குறித்து விராட் கோலி அளித்த மற்றொரு பேட்டியில், ‘தெண்டுல்கரை போன்று நான் நீண்ட காலம் விளையாட (24 ஆண்டு) முடியாமல் போகலாம். அவர் 200 டெஸ்ட் விளையாடி இருக்கிறார். 100 சர்வதேச சதங்கள் அடித்துள்ளார். இவை எல்லாம் அசாத்தியமான சாதனைகள். ஆனால் சர்வதேச அரங்கில் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.

மோர்கன் கருத்து

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘களத்தில் நுழைந்த போது, மைதானம் சிறியதாக இருக்கிறது, பந்து வீச்சாளர்களுக்கு கடினம் என்பதை புரிந்து கொண்டோம். அதனால் தான் நாங்களும் முதலில் பந்து வீச விரும்பினோம். ஆடுகளத்தில் பந்து பெரிய அளவில் சுழன்று திரும்பவில்லை. இந்த ஆடுகளத்தில் 350 ரன்கள் என்பது வெற்றிக்குரிய ஸ்கோர் அல்ல. கேதர் ஜாதவ் –கோலியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க தவறி விட்டோம். ஆட்டத்தின் பெரும் பகுதியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசியில் எல்லா பெருமையையும் கோலி, ஜாதவ் பெற்று விட்டனர். குறிப்பாக கேதர் ஜாதவ் இது போன்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடிய அவர் எங்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை.

எங்களது பேட்டிங்கின் போது 35 முதல் 45 ஓவர்கள் இடையே ரன்வேகம் சற்று தளர்ந்து போய் விட்டது. குறிப்பாக அந்த சமயத்தில் ஜோஸ் பட்லரின் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இல்லாவிட்டால் ஸ்கோர் இன்னும் அதிகமாகியிருக்கும்’ என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நாளை மறுதினம் நடக்கிறது.

மூலக்கதை