ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி, பீட்டர் முகர்ஜி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

தினத்தந்தி  தினத்தந்தி
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி, பீட்டர் முகர்ஜி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

மும்பை,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.
பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2–வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்த வாதம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி துவங்கியது. இந்த வாதம் முடிவுக்கு வந்த நிலையில், ஷீனா போரா அவரது கணவர் பீட்டர் முகர்ஜி முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது கொலை மற்றும் சதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மூவரிடம் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கப்பட்டது. அப்போது நாங்கள்  குற்றம் செய்யவில்லை என்று கூறிய அவர்கள், வழக்கை எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.  இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட மூவர் மீதும் ஐபிசி பிரிவு 120(b) ( (சதித்திட்டம்), 364( கடத்தல்), 302( கொலை), 34(பல நபர்கள் உதவியுடன்  ஒரே நோக்கத்தோடு செய்தல்), உள்பட பல பிரிவுகளின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷீனா போராவின் சகோதரர் மிகாலி போராவை கொலை செய்ய முயற்சித்ததாக இந்திராணி மற்றும்  சஞ்சீவ் ஆகியோர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை