ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு குற்றச்சாட்டு; பதிலளிக்க மத்திய அரசுக்கு...

தினத்தந்தி  தினத்தந்தி
ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு குற்றச்சாட்டு; பதிலளிக்க மத்திய அரசுக்கு...

புதுடெல்லி, 
எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் டி.பி.யாதவ், எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு போதிய மற்றும் தரமான உணவு வழங்கப்படுவது கிடையாது என்ற குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. பிரதம அலுவலகம் இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உள்துறைக்கு உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்பு படை குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 
இவ்வழக்கானது நீதிபதிகள் ஜி ரோகினி மற்றும் சங்கீதா திங்ரா சேக்கால் அடங்கிய பெஞ்ச் முன்னதாக விசாரணைக்கு வந்தது. ராணுவ வீரர்கள் தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை அளிக்க எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்),  மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்), இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை,  சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) மற்றும் அசாம் ரைபிள் படைக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்பு படை பகதூர் யாதவ் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை அறிக்கையை அளிக்க எல்லைப் பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டது. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகவும் பதில் கோரியது.
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
எல்லைப் பாதுகாப்பு படை நடவடிக்கையை தொடங்கிவிட்டது. இருப்பினும் அவர்களுடை அறிக்கையை காண விரும்புகிறோம். உங்களிடம் உள்ள அறிக்கையை கோர்ட்டு முன் சமர்பியுங்கள், அடுத்த விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என பெஞ்ச் குறிப்பிட்டு உள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கிவிட்டது என வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்த போது ஐகோர்ட்டு இவ்வாறு கூறியது. 
மனுதாரர் தரப்பில் தரமற்ற உணவு தொடர்பாக குற்றம் சாட்டிய ராணுவ வீரர் யாதவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதுதொடர்பாக எந்தஒரு உத்தரவையும் பிறபிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. முன்னாள் மத்திய அரசு பணியாளர் புரண் சாந்த் ஆர்யா இவ்வழக்கை தொடர்ந்து உள்ளார். 

மூலக்கதை