வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து...

தினத்தந்தி  தினத்தந்தி
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து...

வெலிங்டன்,

வெலிங்டன் டெஸ்ட்

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 12–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேசம் 595 ரன்களும், நியூசிலாந்து 539 ரன்களும் குவித்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 4–வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்ததால் இந்த டெஸ்ட் டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நாளான நேற்று நியூசிலாந்து வீரர்கள் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினர். தொடர்ந்து பேட் செய்த வங்காளதேச அணி 2–வது இன்னிங்சில் 57.5 ஓவர்களில் 160 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக சபிர் ரகுமான் 50 ரன்கள் எடுத்தார். முதலாவது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த ‌ஷகிப் அல்–ஹசன் இந்த இன்னிங்சில் டக்–அவுட் ஆனார். பந்து தாக்கியதில் காயமடைந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 13 ரன்களுடன் வெளியேறினார். அதன் பிறகு அவர் பேட் செய்ய வரவில்லை. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், சான்ட்னெர், வாக்னெர் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சவுதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து வெற்றி

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேசம் 57 ஓவர்கள் பந்து வீச வேண்டி இருந்தது.

இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ராவல் (13 ரன்), டாம் லாதம் (16 ரன்) நிலைக்காவிட்டாலும் கேப்டன் கனே வில்லியம்சன் அதிரடியாக விளையாடி வெற்றியை தேடித்தந்தார். அவருக்கு ராஸ் டெய்லர் (60 ரன்) உறுதுணையாக இருந்தார்.

நியூசிலாந்து அணி 39.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 217 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 15–வது சதத்தை பூர்த்தி செய்த வில்லியம்சன் 104 ரன்களுடன் (90 பந்து, 15 பவுண்டரி), ஹென்ஹி நிகோல்ஸ் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இமாலய ஸ்கோரில் தோல்வி

முதல் இன்னிங்சில் இமாலய ஸ்கோர் குவித்து, அதன் பிறகு அந்த டெஸ்டில் ஒரு அணி தோற்ற வகையில் முதலிடத்தில் வங்காளதேசம் இருக்கிறது. இந்த டெஸ்டில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 595 ரன்கள் எடுத்தும் தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை. இதற்கு முன்பு 1894–ம் ஆண்டு சிட்னியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 586 ரன்கள் சேர்த்து அதில் தோற்றதே இந்த வகையில் முதலிடத்தில் இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 20–ந்தேதி தொடங்குகிறது.

முஷ்பிகுர் ரஹிமை பதம் பார்த்த ‘பவுன்சர்’

இந்த டெஸ்டில் வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 13 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பந்து தாக்கியதில் காயம் அடைந்தார். அதாவது வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வீசிய ‘பவுன்சர்’ பந்தை குனிந்து தவிர்க்க முயற்சித்த போது, பந்து ஹெல்மெட்டின் இடது காதோர பகுதியில் பதம் பார்த்தது. வலியால் துடித்த அவர் நிலைகுலைந்து விழுந்தார். இதையடுத்து உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் ஆட்டம் 15 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

பரிசோதனையில் பயப்படும்படி எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும் அதன் பிறகு அவர் பேட் செய்யவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை சபிர் ரகுமான் கவனித்தார்.

ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்திற்கு வருகை தந்த முஷ்பிகுர் ரஹிம், தற்போது நன்றாக இருந்தாலும் கொஞ்சம் வலி இருப்பதாக கூறினார். தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மூலக்கதை