இந்தியாவிற்கு என்எஸ்ஜியில் இடம் பிரியாவிடை பரிசாக முடியாது ஒபாமா மீது சீனா...

தினத்தந்தி  தினத்தந்தி
இந்தியாவிற்கு என்எஸ்ஜியில் இடம் பிரியாவிடை பரிசாக முடியாது ஒபாமா மீது சீனா...



பெய்ஜிங்,
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைந்து, டொனால்ட் டிரம்ப் தலைமையில் புதிய அரசு அமையவிருக்கிறது.  48 அணுசக்தி நாடுகளின் சிறப்பு பட்டியலில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியாவிற்கு ரஷியா, அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று சீனா மட்டும் எப்போதும் போல இந்தியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டையிட்டு உள்ளது.   
அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்த அம்சங்கள் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகக் கூறி இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது. பாகிஸ்தான், இஸ்ரேல், தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இருப்பினும் இந்தியாவின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்பட பிற அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளும் ஆதரவை தெரிவித்து வருகிறது. இந்தியா தனது அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு இந்தியா பரவச் செய்யாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
கடந்த 2008-ம் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தை மையமாக கொண்டு இந்தியாவிற்கு சீனா தயக்கத்துடன் ஆதரவு அளித்ததை தொடர்ந்து சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்தை அணுக இந்தியாவிற்கு என்எஸ்ஜி பிரத்தியேக சலுகையை வழங்கியது.
இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பு நாடாக, ஒருமித்த கருத்து என்ற கொள்கையுடன் அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது ஏதாவது ஒரு நாடு இந்தியவிற்கு எதிராக ஓட்டளிக்குமாயின் அது இந்தியாவின் முயற்சிக்கு எதிராக அமையும். உறுப்பினர் ஆக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முயற்சித்து வருகிறது. அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் மனு கடந்த மே 12-ம் தேதி அனுப்பட்டது. என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினரானால் கணிசமாக அணுஆற்றல் துறையை விரிவாக்க உதவியாக அமையும். 
ஆனால் பயங்கரவாதம் நிறைந்த பாகிஸ்தானுடன் கைகோர்த்துக் கொண்டு சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஒவ்வொரு நகர்வுக்கும் முட்டுக்கட்டையிட்டு வரும் சீனா, இவ்விவகாரத்திலும் இந்தியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டையிட்டு உள்ளது. ஆனால் எந்தஒரு நாடும் ஆதரவு தெரிவிக்க தயங்கும் பாகிஸ்தான் என்எஸ்ஜியில் உறுப்பு நாடாக சீனா வக்காளத்து வாங்கி வருகிறது.
அமெரிக்கா இந்தியா ஆதரவு தெரிவித்ததோடு பிற நாடுகளும் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
சீனா மட்டும்தான் தடை
இந்நிலையில் அமெரிக்காவின் இப்போதைய அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணைய அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் பேசுகையில்; என்எஸ்ஜி கூட்டமைப்பில் உறுப்பினராவதற்குரிய முழுதகுதி இந்தியாவுக்கு உள்ளது என்பதே அதிபர் ஒபாமாவின் நிலைப்பாடு ஆகும். எனவே, இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவை இணைத்து கொள்வதற்காக, பிறஉறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், கூட்டமைப்பில் ஒரு சில உறுப்பு நாடுகள் எழுப்பும் அச்சங்களையும், சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டியிருப்பதால் இந்தியாவை சேர்த்துக் கொள்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
என்எஸ்ஜியில் இந்தியாவை இணைத்துக் கொள்ள ஒபாமா அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை புதிய அரசும் தொடரும் என நம்புகிறேன்.தற்போதைய நிலையில், என்எஸ்ஜி-யில் இந்தியா இணைவதற்கு ஒரே முட்டுக்கட்டையாக இருப்பது சீனாதான். அந்த முட்டுக்கட்டையை சரி செய்வதுதான் முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
பிரியாவிடை பரிசு
ஒபாமா அரசு வெளியேற உள்ளநிலையில் இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பு நாடாவது பிரியாவிடை பரிசாக முடியாது என்று சீனா காட்டத்தை காட்டிஉள்ளது.  நிஷா தேசாய் பிஸ்வால் பேச்சு தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹவா சங்யிங் பேசுகையில், “என்எஸ்ஜி உறுப்பு நாடாக இந்தியா விண்ணப்பித்து உள்ள விவகாரம் மற்றும் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இணையாத நாடுகளை என் எஸ்ஜியில் உறுப்பு நாடாக இணைக்கும் விவகாரம் தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து விட்டோம், அதனை நான் மீண்டும் தெரிவிக்க விரும்பவில்லை,” என்று கூறிஉள்ளார். சீனா மட்டுமே தடையாக உள்ளது என்று பிஸ்வால் உறுதிப்பட கூறிய நிலையில் ஹவா சங்யிங், 
ஒபாமா அரசு வெளியேற உள்ளதை குறிப்பிட்டு “என்எஸ்ஜியில் உறுப்பினராவது நாடுகளுக்கு வழங்கும் பிரியாவிடை பரிசாக முடியாது,” என்று கூறிஉள்ளார். இவ்விவகாரத்தில் பாகிஸ்தானையும் தூண்டிவிட்டுக் கொண்டு இருக்கிறது சீனா. 

மூலக்கதை