இலங்கையில் எங்களது முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இந்தியா மறுஆய்வு...

தினத்தந்தி  தினத்தந்தி
இலங்கையில் எங்களது முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இந்தியா மறுஆய்வு...

பெய்ஜிங்,
இந்தியா மறுஆய்வு செய்யவேண்டும் என்று கூறிஉள்ள சீன அரசு மீடியா இலங்கையில் முதலீடு விவகாரத்தில் இந்தியா பொறாமை கொள்ளாமல், வளர்ச்சி திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் கூறிஉள்ளது. 
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில், சீன ஆதரவுடன் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட போது போராட்டம் வெடித்தது. கொழும்பில் இருந்து சுமார் 240 கி.மீ. தொலைவில் உள்ள ராஜபக்சேவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ராஜபக்சே தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 
அம்பாந்தோட்டையில் அமையும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 80 சதவீதப் பங்குகளை சீனாவுக்கு அளிக்கும் வகையில் இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், எங்களது நிலங்களை சீனாவுக்கு தாரைவார்க்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்பது உள்ளூர் மக்களின் கூற்றாக உள்ளது. ஆனால் இப்போதைய இலங்கை அரசு அதனை கண்டுக் கொள்வது போல் தெரியவில்லை. இப்பிரச்சனையில் ஏற்கனவே இந்தியாவை சாடிய ராஜபக்சே, “இலங்கையில் என்னுடைய ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பிய இந்தியா, இப்போது அந்நிகழ்வுக்கு அமைதியாக உள்ளது,” என்றார். இந்நகர்வு தொடர்பாக இந்திய அரசு தரப்பில் எந்தஒரு கருத்தும் வெளியாகவில்லை. 
இந்தியாவின் ஒவ்வொரு அசைவிற்கும் எதிராக கட்டுரை எழுதும் சீன அரசு பத்திரிக்கை, இப்போது இலங்கையில் எங்களது முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இந்தியா மறுஆய்வு செய்யவேண்டும் என்று கூறிஉள்ளது.  “பிராந்தியத்தில் கட்டமைப்பை மேம்படுத்த சீனாவின் நடவடிக்கைக்கு ஆதரவான போக்கை தெற்காசிய நாடுகள் கொண்டிருக்கவேண்டும், இந்தியா போன்ற பிராந்தியத்தில் சந்தேகம் கொள்ளும் நாடுகள் இலங்கையில் சீனாவின் முதலீடு தொடர்பான விவகாரத்தில் தங்களுடைய நிலையை மறுஆய்வு செய்யவேண்டும்” என்று கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது. இலங்கையில் சீனாவின் அதித முதலீடு தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள கவலைகளை குறிப்பிட்டு, இலங்கையில் சீனாவின் முதலீடு இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் நகர்வாக இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 
இலங்கை உடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு இந்தியா, ஜப்பான் உள்பட மூன்றாவது நபரை இலக்காக கொள்ளும் நோக்கம் கிடையாது. சீனாவின் திட்டமானது வளர்ச்சி திட்டத்தை முன்னெடுப்பது, ஒரு திறந்த மற்றும் உள்ளடங்கிய சர்வதேச கூட்டுறவு திட்டமாடும், இதில் பங்கு பெற விரும்பும் நாடுகளை வரவேற்கிறோம் என்று கட்டுரையில் சீனா தற்பெருமை அடிக்கப்பட்டு உள்ளது. தெற்கு ஆசியாவில் புதிய பொருளாதார சாலைக்கான நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் சீனாவின் நடவடிக்கையில் முதலில் பயன்பெற போவது இந்தியாவும், வங்காளதேசமும்தான்.
 இலங்கை உடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு வெறும் உள்ளூர் பொருளாதாரம் மட்டுமின்று முழு பிராந்தியத்திற்கும் பங்களிப்பாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மூலக்கதை