அதிகாரப்பகிர்வை பரிசீலிக்காவிட்டால் ‘அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில்...

தினத்தந்தி  தினத்தந்தி
அதிகாரப்பகிர்வை பரிசீலிக்காவிட்டால் ‘அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில்...

கொழும்பு

புதிய அரசியல் சாசனம்

இலங்கையில் கடந்த 1978–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்துக்கு பதிலாக புதிய அரசியல் சாசனம் ஒன்றை வகுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டு இருந்த 6 துணை குழுக்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு பிரதான குழுவுக்கு அளித்துள்ளது.

புதிய அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கைகளில் பிரதான தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈடுபட்டு உள்ளது. இலங்கையில் ஏற்படுத்தப் போகும் புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் பிரச்சினைக்கு முடிவு காண்பதுடன், அதிகப்படியான அதிகாரப்பகிர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.

மேலும் ஒன்றுபட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூட்டாட்சி கட்டமைப்பு அடிப்படையிலான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

சிங்கள அமைப்புகள் தயக்கம்

ஆனால் கூட்டாட்சி தீர்வு குறித்து பேசுவதற்கே சிங்கள அமைப்புகள் தயங்கி வருகின்றன. காலேயில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் சிறிசேனாவும், கூட்டாட்சி தீர்வை நிராகரித்தார். இலங்கையில் கூட்டாட்சி முறைக்கு தனது கட்சி ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் இது குறித்து நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:–

அரசுடன் விவாதம்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதுடன், கூட்டாட்சி அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக எங்களுக்கு ஒரு அதிகாரத்தை மக்கள் வழங்கி உள்ளனர். இது குறித்த ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக அரசுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம். 13–வது திருத்தத்தை விரிவான அதிகாரப்பகிர்வு வழிமுறையாக நாங்கள் ஏற்க முடியாது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது மற்றும் அதிகப்படியான அதிகாரப்பகிர்வை இந்த அரசு கருத்தில் கொள்ளாமல் விட்டு விட்டால், அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில் நாங்கள் பங்கெடுக்கமாட்டோம். அதில் இருந்து வெளியேறுமாறு எங்கள் அமைப்பை நாங்கள் வற்புறுத்துவோம்.

இவ்வாறு சித்தார்த்தன் கூறினார்.

மூலக்கதை