என்னை இழிவுபடுத்துவதா? ‘‘நான் ஜல்லிக்கட்டை எதிர்க்கவில்லை’’ நடிகை திரிஷா கருத்து

தினத்தந்தி  தினத்தந்தி
என்னை இழிவுபடுத்துவதா? ‘‘நான் ஜல்லிக்கட்டை எதிர்க்கவில்லை’’ நடிகை திரிஷா கருத்து

சென்னை,

‘‘நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசவில்லை. ஒரு பெண்ணை அவமதிப்பதுதான் தமிழ் கலாசாரமா’’ என்று நடிகை திரிஷா கூறினார்.

திரிஷாவுக்கு எதிர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா நீடிப்பதை தமிழ் அமைப்பினரும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் எதிர்த்து வருகிறார்கள். பீட்டாவில் இருந்து திரிஷா வெளியேறவும் வற்புறுத்துகிறார்கள். டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவை கடுமையாக விமர்சித்து கருத்துகள் பதிவிடுகிறார்கள்.

அவரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். இந்த சுவரொட்டி சமூக வலைத்தளங்களிலும் பரவி திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. காரைக்குடி அருகே உள்ள நேமத்தான் பட்டியில் திரிஷா நடிக்கும் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் புகுந்து திரிஷாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கவில்லை

இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு படக்குழுவினர் அங்கிருந்து வெளியேறினார்கள். தனக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் மற்றும் அவதூறு சுவரொட்டிகள் குறித்து திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாக வெளியான தகவல் வருமாறு:–

‘‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் எப்போதும் பேசியதே இல்லை. ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ் கலாசாரமா? உங்களை தமிழன் என்று சொல்லிக்கொள்ளவும் தமிழ் கலாசாரம் பற்றி நீங்கள் பேசவும் வெட்கப்பட வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் பணிந்தது கிடையாது. பயப்படவும் மாட்டேன்.

பாதுகாப்பு

இந்த பிரச்சினையில் பலர் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளனர். கர்ஜனை படக்குழுவினர் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள். எனக்கு ஆதரவாக இருக்கும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.’’

இவ்வாறு திரிஷாவின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கமல்ஹாசன் கருத்து

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘திரிஷாவை காயப்படுத்த வேண்டாம். அவருக்கும் நமக்குமுள்ள வேற்றுமையை ஊரறியட்டும். கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன். கண்ணியத்துக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம். அவதூறு செய்வதன் மூலம் நமது நியாயத்தை பலவீனப்படுத்த வேண்டாம். முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக போராடுங்கள்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் காலையில் அவர் பதிவு செய்த கருத்துக்கு முரணாக இரவில், ‘‘நான் ஒரு தமிழச்சி. பீட்டா அமைப்பை ஆதரிக்கிறேன். மிருகங்களை கொடுமைப்படுத்துவதை பழங்கால முறை என்று நியாயப்படுத்த முடியாது. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்’’ என்ற கருத்து வெளியானது.

டுவிட்டரில் இருந்து வெளியேறினார்

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து அவரை மோசமாக திட்டி தீர்த்தனர். உடனே, ‘‘டுவிட்டரில் அந்த கருத்தை நான் பதிவிடவில்லை. யாரோ ஊடுருவி இப்படி பதிவிட்டு இருக்கிறார்கள். நான் டுவிட்டரை விட்டே வெளியேறுகிறேன்’’ என்று கூறிவிட்டு டுவிட்டரில் இருந்து திரிஷா விலகி விட்டார்.

மூலக்கதை