முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்து 350 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி  தினத்தந்தி
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்து 350 ரன்கள் குவிப்பு

புனே,
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0–4 என்ற கணக்கில் மோசமாக இழந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதன் பிறகு தாயகம் திரும்பியது. அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடி விட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளது.
அடுத்ததாக இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 
டோனி, கேப்டன் பதவியை விட்டு விலகியதால் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துகிறார். 
கோலி தலைமையின் கீழ் டோனி முதல் முறையாக விளையாட இருப்பதும், யுவராஜ்சிங் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியது. டெஸ்ட் தொடரில் அசத்திய இந்திய அணி ஒரு நாள் தொடரிலும் அதே போன்று ஆதிக்கம் செலுத்துமா? என்பதை கணிப்பது கடிமானது என்ற நிலையாகும். ஏனெனில் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வலுவான அணியாக இருக்கிறது. 
முதலாவது பயிற்சி ஆட்டத்தில் கூட 305 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்திருந்தது. அதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்ற நிலையில் இன்றைய போட்டி தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி நேர்த்தியாக ஆட தொடங்கியது. தொடக்கத்தில் ஹலாஸ் தவிர களமிறங்கிய வீரர்கள் அனைவருமே அவர்களது பங்கிற்கு சரியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு ரன்னை சேர்த்தனர். தொடக்க ஆட்டக்காரர் ராய் 12 பவுண்டரிகள் அடித்து 73 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 350 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு 351 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது. 
விக்கெட் விபரம்:-
 1-39 (ஹாலெஸ், 6.2 ஓவர்கள்), 2-108 (ஜாசன் ராய் 18.3 ஓவர்கள்), 3-157 (மோர்கன், 26.6 ஓவர்கள்), 4-220 (பட்லர், 37.5 ஓவர்கள்), 5-244 (ஜோ ரூட், 41.4 ஓவர்கள்), 6-317 ( ஸ்டோக்ஸ், 47.1 ஓவர்கள்), 7-336 (மொயீன் அலி, 48.4 ஓவர்கள்)
இந்திய அணியில் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

மூலக்கதை