டோனியிடம் ஆலோசனை பெறுவேன் வீராட் கோலி சொல்கிறார்

தினத்தந்தி  தினத்தந்தி
டோனியிடம் ஆலோசனை பெறுவேன் வீராட் கோலி சொல்கிறார்


புனே, 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடக்கிறது.
ஒருநாள் மற்றும் 20 ஒவர் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியதால் இங்கிலாந்து தொடருக்கு வீராட்கோலி கேப்டனாக பொறுப்பெற்று உள்ளார். இந்திய அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்)  அவர் தற்போது கேப்டனாக உள்ளார்.கேப்டன்  பதவியில் இருந்து விலகிய டோனி அணியில் தொடர்ந்து விளையாடுவார். கேப்டன் பதவி விலகல் குறித்து அவர் கூறும் போது “இது எனது சொந்த முடிவுதான். இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன் முறை சரிவராது. வீராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க இதுதான் சரியான நேரம். அவருக்கு ஆலோசனை வழங்குவேன்” என்று கூறி இருந்தார்.
இன்றைய போட்டி குறித்து நிருபர்களிடம் பேசிய வீராட்கோலி, டோனியிடம் ஆலோசனை பெறுவேன் என்றார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-  ஆடுகளத்தில் டோனியை போல் புத்திசாலித்தனமாக செயல்படும் கேப்டன் யாரும் இல்லை. குறிப்பாக நடுவரின் முடிவை  மறு பரிசீலனை செய்யும் டிஆர்எஸ். முறையை பயன்படுத்துவதில் அவரது நுணுக்கமான அறிவை கண்டு வியந்து இருக்கிறேன். டோனியின் ஆலோசனைப்படி செயல்படுவேன். அவரது ஆலோசனையை பெற தயங்க மாட்டேன், அவர் விலை மதிப்பு மிக்கவர். உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்துவதன் மூலமே யுவராஜ்சிங்குக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 
தற்போதைய இந்திய அணி சம பலத்துடன் உள்ளது. மிடில் மற்றும் பின்கள வரிசையில் டோனி, யுவராஜ், கேதர்யாதவ், ஹார்த்திக் பாண்ட்யா உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தயார் படுத்திக் கொள்ள இந்த தொடர் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு வீராட்கோலி கூறியுள்ளார். வீராட்கோலி தலைமையின் கீழ் டோனி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக அணியில் ஆடுகிறார்.

மூலக்கதை