“நல்ல தலையா கிடைச்சா தலைப்பொங்கல்தான்...” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கலகல’ பேட்டி

தினத்தந்தி  தினத்தந்தி
“நல்ல தலையா கிடைச்சா தலைப்பொங்கல்தான்...”
 நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கலகல’ பேட்டி

வரிடம், “நீங்கள் தலைப்பொங்கல் கொண்டாடப் போவது எப்போது?” என்று கேட்டபோது...

“நல்ல தலையா கிடைச்சா தலைப்பொங்கல்தான்” என்று சிரித்தபடி சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, “என்னை இவ்வளவு சீக்கிரமா தலைப்பொங்கல் கொண்டாட சொல்வதில், உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? என்று கேட்டார். “திருமணத்துக்கு இன்னும் நிறைய வருடங்கள் போகணும்” என்றவர் தொடர்ந்து சொல்கிறார்:

“காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்கு அப்புறம் என்னைத் தேடி நிறைய தமிழ், தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகள் வருகின்றன. பெரும்பாலும் ஒரே மாதிரி கதைகளாக வருகின்றன. நல்ல கதை மற்றும் கதாபாத்திரங் களுக்காக காத்திருக்கிறேன். சரியான படங்கள் பண்ணணும் என்று நினைக்கிறேன். வருடத்துக்கு 2 படங்களில் நடிக்கணும். அதுவும் நல்ல படங்களாக இருக்கணும்.

நான் துல்கர் சல்மானுடன் நடித்த மலையாள படம் அடுத்து திரைக்கு வர இருக்கிறது. கேரளாவில் இப்போது, ‘ஸ்டிரைக்’ நடக்கிறது. அது முடிந்ததும் அந்த படம் வெளிவந்து விடும். நல்ல கதை. அதை யடுத்து நிவின்பாலியுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறேன். இதுவும் ஒரு நல்ல கதை” என்றார்.

‘குறிப்பிட்ட கதைகளிலும், கதாபாத் திரங்களிலும்தான் நடிக்க வேண்டும் என்ற வரையறை எதுவும் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்ட போது...

“அப்படி ஒரு திட்டமும் இல்லை. இந்த கதையில்தான் நடிக்கணும், இந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்கணும் என்ற திட்டம் எதுவும் இல்லை. அதேபோல் கவர்ச்சியாக நடிக்கக் கூடாது...கவர்ச்சிகரமாக உடுத்தக் கூடாது என்றும் நினைக்கவில்லை. எல்லா மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். சும்மா வந்து போகிற மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்பவில்லை” என்று விளக்கினார்.

‘ஜெயலலிதா வாழ்க்கை படமாகப் போகிறதாமே...ஒருவேளை அவர் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால், ஏற்பீர்களா?’ என்று கேட்ட போது...

“எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். அழகான-திறமையான நடிகை என்ற வகையிலும், துணிச்சல் மிகுந்த பெண்-அரசியல்வாதி என்ற வகையிலும் அவரை எனக்கு பிடிக்கும். அவரைப் போன்ற ஒரு தைரியமான பெண்ணை இனிமேல் பார்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான். அவராக நடிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னால் எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் எந்த கதாபாத்திரமானாலும் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு ஏற்பட்டு இருக்கிறது”

‘சமீபகாலமாக பிரபல கதாநாயகிகள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்களே...?’ என்ற கேள்விக்கு...

“நல்ல விஷயம்தானே... ஒரு பாயிண்டுக்கு அப்புறம் பாட்டு, டூயட்டுக்கு மட்டும் ஆடுவது அலுத்துப் போய் விடும். அதனால்தான் நயன்தாரா ‘மாயா,’ ‘டோரா’ என்று மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களுக்கு வந்துட்டாங்க. திரிஷா, ‘கொடி’ மாதிரி படம் பண்ணுறாங்க. நான், ‘காக்கா முட்டை’ பண்ணினேன். இந்த படங்கள் எல்லாம் வெற்றி பெறுவதால், தொடர்ந்து அது மாதிரி படங்களும், கதைகளும் வருகின்றன. இது, எங்களை மாதிரி கதாநாயகிகளுக்கு ஆரோக்கியமான விஷயம்தான்” என்றார்.

‘ஒரு இந்தி படத்தில் நடித்தீர்களே...அது என்ன ஆச்சு?’ என்று கேட்டதும்,

“அந்த இந்தி படத்தின் பெயர், ‘டாடி.’ அது, மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மும்பையில் வாழ்ந்த ஒரு தாதாவின் உண்மை கதை. தாதாவாக அர்ஜுன் ராம்பால் நடித்து இருக்கிறார். அவருடைய மனைவியாக நான் நடித்து இருக்கிறேன். அந்த படத்தின் ‘ரிசல்ட்’டைப் பொறுத்து என் இந்தி பட உலக பயணம் அமையும்”

“நானும், விஜய் சேதுபதியும் ஜோடியாக நடித்த தர்மதுரை நல்ல கதை. அந்த கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக நாங்களும் அமைந்திருந்தோம். எங்க ஜோடி பொருத்தமாக அமைந்திருந்ததாக நிறைய பேர் பாராட்டினார்கள். இது, எல்லா படங் களுக்கும் அமையாது. ‘தர்மதுரை’யில் அமைந்திருந்தது.”

மூலக்கதை