மம்தா விமானம் தரையிறங்க அனுமதிக்காத விவகாரம் : நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்

தினகரன்  தினகரன்
மம்தா விமானம் தரையிறங்க அனுமதிக்காத விவகாரம் : நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்

புதுடெல்லி: மேற்குவங்க முதலைமச்சர் மம்தா பானர்ஜி விமானம் தரையிறங்க அனுமதிக்காத விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை மக்களவையில் எழுப்பினர். பாட்னாவில் இருந்து கொல்கத்தா வந்த விமானம் எரிபொருள் இல்லாத நிலையில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜு ஒரே நேரத்தில் 3 விமானங்கள் இறங்குவதற்காக வட்டமிட்டதால் தாமதம் ஏற்பட்தாக கூறினார். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை நண்பகல் வரையில் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது ரூபாய் நோட்டு  பிரச்சினை எதிரொலித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல் மாநிலங்களவையிலும் மம்தா பிரச்சினை எதிரொலித்தது. திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்க தாமதம் செய்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ஏற்பட்ட அமளியால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது ஐடி மசோதாவை பண மசோதாவாக மத்திய அரசு நிறைவேற்றியது பற்றி காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை