கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி – புதின் துவக்கி வைத்தனர்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி – புதின் துவக்கி வைத்தனர்

கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவா நகரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்துகொண்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று காலையில் துவங்கின.

இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோதியும், ரஷ்ய அதிபர் புதினும் காணொளிக் காட்சி மூலம் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்தனர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோதி, இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய ஒத்துழைப்புடன் மேலும் 8 அணு உலைகள் கட்டப்படும் நிலையில், அணுசக்தி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இருதரப்புக்குமே பலனளிக்கும் என மோதி தெரிவித்தார்.

நிலையான நட்புறவு

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இந்திய நிறுவனங்கள் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருப்பதையும் மோதி சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவுடனான உறவில் நிலையான அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயும் ஆந்திரப் பிரதேச ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஹரியானா ஸ்மார்ட் சி்ட்டி திட்டம், ஆந்திராவில் கப்பல் கட்டும் திட்டம், ராஸ்நெஃப்ட் – எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம், நாக்பூர் – செகந்திராபாத் – ஹைதராபாத் அதிவேக ரயில் திட்டம், இணையப் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 16 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள S-400 த்ரயம்ஃப் பாதுகாப்பு அமைப்பை வாங்க விருப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது. மேலும் கமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலையை இருதரப்பும் சேர்ந்து அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மூலக்கதை