தமிழகத்துக்கு துணை முதல்வர்: பின்னணியில் எயிம்ஸ் மருத்துவர்கள்?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
தமிழகத்துக்கு துணை முதல்வர்: பின்னணியில் எயிம்ஸ் மருத்துவர்கள்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவர் இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர் தமிழகத்தில் துணை முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகமாக பேசப்படுகிறது. இதன் பின்னணியில் எயிம்ஸ் மருத்துவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன பிரச்சனை, அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் இருந்து வந்தது. பல்வேறு வகையில் முயற்சித்தும் முதல்வர் குறித்த முழுமையான உண்மையான தகவலை மத்திய அரசால் பெற முடியவில்லை.

இந்நிலையில் தான் முதல்வரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவர்கள் முதல்வரின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை ஆய்வு செய்து, அந்த தகவலை பிரதமர் அலுவலகத்திற்கு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எயிம்ஸ் மருத்துவர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்த தகவலுக்கு பின்னரே துணை முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் குறித்த விவாதம் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது.

காரணம் எயிம்ஸ் மருத்துவர்கள் அனுப்பிய ரிப்போர்ட் மத்திய அரசை யோசிக்க வைத்துள்ளதாம். முதல்வர் இந்த நிலமையில் இருக்கும் போது எப்படி மாநில நிர்வாகம் தொய்வில்லாமல் நடக்கும். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் தற்போது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் தான் அதிமுக தரப்பு தற்போது துணை முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மூலக்கதை