டெல்லி உட்பட 22 விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
டெல்லி உட்பட 22 விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

நாடு முழுவதும் உள்ள 22 விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உளவுத்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28–ந்தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டன. இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த நிலையில், நாட்டின் எல்லையோரம் உள்ள மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் குஜராத், ஆகிய மாநிலங்களில் உள்ள 22 விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று உளவுத்துறை அந்தந்த மாநிலங்களை எச்சரித்துள்ளது.

விமானநிலையங்களில் பயணிகள் கொண்டுவரப்படும் பொருட்கள் உடைமைகள், தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கவும், விமான நிலைய வாளகங்களில் வரும் வாகனங்களை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் எனவும் சந்தேகத்தின் பேரில் நிற்கும் வாகனங்களை உடனடியாக சோதித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை