1000 ஏக்கர் நிலம்; 3078 வங்கி கணக்கு; 150 கார் ; 40 ஆயிரம் கோடி : ரோஸ் வாலி நிறுவன மோசடி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
1000 ஏக்கர் நிலம்; 3078 வங்கி கணக்கு; 150 கார் ; 40 ஆயிரம் கோடி : ரோஸ் வாலி நிறுவன மோசடி

இந்தியாவில் செயல்படும் ரோஸ் வாலி தனியார் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சிறுசேமிப்பு பணத்தில் ரூ.40 ஆயிரம் கோடி வரை மோசடி செய்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பொது மக்களிடம் பல ஆயிரம் கோடி செய்து சாரதா நிதி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் தற்போது அடுத்த செய்தி வெளியாகியிருக்கிறது.

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரோஸ் வாலி என்ற நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் தன்னுடையை கிளையை நிறுவியுள்ளது. ஹோட்டல், ரியல் எஸ்டெட் மற்றும் பொழுது போக்கு துறையில் போலி முதலீட்டுத் திட்டங்களின் மூலம், பொதுமக்களிடம் இருந்து சுமார் 15 ஆயிரம் கோடி வரை நிதி வசூலித்து மோசடி செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. எனவே இந்த நிறுவனத்தின் நிறுவனர் கௌதம் குந்த், அமலாக்கத் துறையினரால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அவரின் சொத்து மதிப்பு மலை போல் குவிந்திருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் வாயடைத்துப் போனார்களாம்.

தனக்கு 700 ஏக்கர் நிலம், 23 ஹோட்டல், 150 கார்கள், 900 நிறுவன கிளைகள் மற்றும் 3078 வங்கிக் கணக்குகள் இருப்பதாக குந்த் விசாரணையில் கூறியுள்ளார்.

மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், அசாம், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், ஆந்திரா என 12 மாநிலங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அவருக்கு 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அதேபோல், முதலில் ரூ.15,400 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டது. அதுவும் தவறான தகவல் என்று தற்போது தெரிய வந்துள்ளது. பொதுமக்களிடமிருந்து ரூ.40 ஆயிரம் கோடி வரை, இந்த நிதி நிறுவனம் மோசடி செய்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெற்ற தொகையில் வெறும் ரூ. 900 கோடி வரை மட்டுமே, பென்சன் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கௌதம் குந்திற்கு காங்கிரஸ், பிஜேடி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் நேரடி தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், பல பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்களும் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

சாராத நிதி நிறுவன மோசடி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தலைவலியை கொடுத்தது. ரோஸ் வாலி நிதிநிறுவன மோசடி விவகாரத்தால் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஆட்சி நடத்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி ஆரம்பித்துள்ளது.

மூலக்கதை