அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

தினமணி  தினமணி
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தெரஸாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி கெüரவித்தார். தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (செப். 5) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது சேவையைப் போற்றும் விதமாக அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

""கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிர்வதிக்கப்பட்டவரான தெரஸாவை புனிதராக அறிவிக்கிறோம்'' என்று போப் பிரான்சிஸ் லத்தீன் மொழியில் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தாயன்பின் வடிவமாகவும், ஏழைகளின் ஆதரவு சக்தியாகவும் விளங்கியவர் அன்னை தெரஸா. அவரை "புனிதர் தெரஸா' என்று நாம் அழைப்பதற்கு சிரமமாக இருக்கலாம்.

அவரது புனிதத்தன்மை எப்போதும் நமக்கு அருகிலேயே இருப்பதால், நாம் நம்மை அறியாமலேயே அவரை அன்னை தெரஸா என்று அழைக்கிறோம்.

"ஒருவருடைய மொழி தெரியாவிட்டாலும், அவரைப் பார்த்து புன்னகைப்பேன்' என்று தெரஸா கூறுவார். அதேபோல், நாமும் அவரது புன்னகையை உளப்பூர்வமாக சுமந்து சென்று, நமது வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் மக்களிடம், குறிப்பாக துன்பத்தில் உழல்பவர்களிடம் உதிர்ப்போம்.

இந்திய நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் தெரஸா தொண்டாற்றியது, ஏழைகளின் அருகில் இறைவன் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது என்றார் போப் பிரான்சிஸ்.

இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டு அரசி சோஃபியாவும் விழாவில் கலந்து கொண்டார்.

இதுதவிர, தெரஸாவின் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' அமைப்பைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த அமைப்பில் தங்கியுள்ள ஏழை மக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர், அந்த ஏழைகளுடன் போப் பிரான்சிஸ் உணவருந்தினார். அவர்களுக்கு கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் விருந்து உபசரித்தனர்.

இந்தியாவில் இருந்து...: விழாவில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெரீக் ஓ' பிரையன், சுதீப் பந்தோபாத்யாய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு செயின்ட் பீட்டர் சதுக்கத்திலும், அதனைச் சுற்றியுள்ள தெருக்களிலும் திறந்த வேனில் பயணம் செய்து ஆயிரக்கணக்கானோரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

கொல்கத்தாவிலும்...: இதனிடையே, வாடிகன் நகரில் நடைபெற்ற வண்ணமயமான விழா, கொல்கத்தாவிலும் பிரதிபலித்தது. கொல்கத்தாவில் தெரஸாவின் சேவை அமைப்பின் தலைமையகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறையில் பூச்செண்டுகள் வைத்தும், மெழுகுவர்த்திகள் ஏற்றியும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ""மகிழ்ச்சியும், ஆசிர்வாதமும், நன்றியுணர்வும் நிறைந்த நாள் இது'' என்று அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த சகோதரி லிஸா கூறினார்.

மாசிடோனியாவில் கடந்த 1910-ஆம் ஆண்டில் பிறந்த அன்னை தெரஸா, தனது 19-ஆவது வயதில் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா வந்தார். பின்னர் கொல்கத்தா நகரில் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' என்ற சேவை அமைப்பைத் தொடங்கிய தெரஸா, ஏழைகளின் துயரம் போக்குவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியாவிலேயே கழித்தார்.

அவருடைய அளப்பரிய சேவையைக் கெüரவிக்கும் வகையில், கடந்த 1979-ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவர், கடந்த 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு முறை அற்புதங்களை நிகழ்த்தியதாக, கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஜான் பால், தெரஸாவுக்கு அருளாளர் பட்டம் அளித்தார். அதைத் தொடர்ந்து, தெரஸாவுக்குப் புனிதம் பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

 

அன்னை தெரஸா உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு

மும்பை, செப். 4: அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, அவரது உருவம் பொறித்த தபால் தலை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

தெரஸா அவரது மறைவுக்குப் பின்னர் அற்புதங்களை நிகழ்த்தியதற்காக புனிதராக அறிவிக்கப்பட்டார்.

இதனைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டது.

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, தபால் தலையை வெளியிட்டார்.

இந்த விழாவில் கொல்கத்தா "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மூலக்கதை