உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கூட்டு நடவடிக்கை தேவை

தினமணி  தினமணி
உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கூட்டு நடவடிக்கை தேவை

உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஜி-20 அமைப்பு நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சீனாவின் ஹாங்ஸூ நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அவர் பேசியதாவது:

உலக பொருளாதாரம் சவாலை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையிலும், சிக்கலான அரசியல் சூழ்நிலையிலும் நாம் இங்கு கூடியுள்ளோம். உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு, வெளிப்படையான மற்றும் கடினமான உரைகள் மட்டும் போதாது. ஜி-20 அமைப்பில் இடம்பெற்றிருக்கும் உறுப்பு நாடுகள், கூட்டாகவும், ஒருங்கிணைந்தும், இலக்குடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி தொடர்பான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் வேண்டும். மேலும், உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவதுடன், திறமையான நபர்கள் கொண்ட கூட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும்.

நமது நாடுகள் அனைத்தும் பொதுவான சவால்களையே சந்திக்கின்றன; ஆதலால் அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு நமக்கு வாய்ப்புகளும் உள்ளன. அடுத்த தலைமுறை உலகப் பொருளாதார வளர்ச்சிக்காக, இயந்திரங்கள், டிஜிட்டல் புரட்சி, புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை நாம் ஒன்றாக இணைக்க வேண்டும்.

அனைவரும் பயன்பெற வேண்டுமெனில், ஜி-20 அமைப்பு நாடுகள் தீர்க்கமான முறையில் செயல்பட வேண்டும். இதற்கு ஜி-20 நாடுகளுக்கு வலுவான கூட்டமைப்புகள் தேவையாகும் என்றார் பிரதமர் மோடி.

ஜி-20 அமைப்பில் ஆர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷியா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. உலகப் பொருளாதாரத்தில் ஜி-20 நாடுகளுக்கு 85 சதவீத பங்குகள் உள்ளன.

 

 

பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை: பிரிக்ஸ் நாடுகளுக்கு வேண்டுகோள்

 

யங்கரவாதம் மற்றும் அதை ஊக்குவிப்போருக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் கூட்டாக சேர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

சீனாவின் ஹாங்ஸூ நகரில், பிரேசில் அதிபர் மிச்சேர் டிமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது மோடி பேசியதாவது:

தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி, உலகின் வேறு பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு என சொந்தமாக வங்கிகளோ, ஆயுதத் தொழிற்சாலைகளோ கிடையாது. யாரோதான் அவர்களுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும் அளிக்கின்றனர். எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிப்போரை, நிதியுதவி செய்வோரை தனிமைப்படுத்த வேண்டும் (சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் மோடி தாக்கிப் பேசினார்).

உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு செல்வாக்கு பெற்ற அமைப்பாக திகழ்கிறது. எனவே உலக அளவில் முக்கிய பங்காற்ற வேண்டிய கடமை பிரிக்ஸ் அமைப்புக்கு உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளுக்கு, அவைகளின் குறிக்கோள்களை அடைவதற்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பும் பிரிக்ஸ் அமைப்புக்கு இருக்கிறது.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாடு, நமது நாடுகளின் உறவை வலுப்படுத்துவதாக மட்டும் இருக்கக் கூடாது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்காக அந்த நாடுகளுக்கும், கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது என்றார் மோடி.

மூலக்கதை