பேருந்து-லாரி மோதல்: ஆப்கனில் 35 பேர் பலி

தினமணி  தினமணி

ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்தும், எரிபொருள் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஜாபூல் மாகாண கவர்னர் பிஸ்மில்லாஹ் ஆப்கன்மால் கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஜாபூல் அருகே ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. காந்தஹாரிலிருந்து பயணிகளைக் ஏற்றிக் கொண்டு காபூல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது திடீரென நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது.

இதில், பேருந்தில் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் தீயில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு கருகின.

இந்த தீ விபத்தில் மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக ஜாபூல் மாகாண தலைநகர் கலாத் மருத்துவமனைக்கும், அருகில் உள்ள காந்தஹார் மாகாண மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர் என்றார் அவர்.

காபூல்-காந்தஹார் நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பயங்கரவாதிகளின் பிடியில் சிக்காமல் இருக்க பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால், அங்கு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

மூலக்கதை